ரஜினி அரசியல் பிரவேசம் வா தலைவா...!
நடிகர் ரஜினிகாந்த்தின் அரசியல் பயணம் தொடங்கி விட்டது . அவரின் படங்கள் திரைக்கு வரும் போதெல்லாம் அவரின் அரசியல் வருகை குறித்துப் பேசப்படுவது வழக்கமானது தான். ஆனாலும், தற்போது முன்னெப்போதையும் விட மிக ஆழமான புரிதலோடு களத்தில் இறங்கியிருப்பது புரிகிறது.
தமிழக அரசியலில் அரை நூற்றாண்டுகளாகத் திராவிடம் பரப்பிக் கொண்டிருந்த பெரும் தலைவர்களின் வெற்றிடத்தை நிரப்பப் போவது யார் என்கிற கேள்வி மக்கள் மத்தியில் நிலவிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் ரஜினியின் அரசியல் வருகைமுக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சின்னம் தேர்வு, 'ஆன்மிக அரசியல்' என்கிற கொள்கைத் தெளிவு என தனக்கான தனிப்பட்ட பாணியில் பாதையை அமைத்துக் கொண்ட ரஜினி, தற்போது நிர்வாகிகள் தேர்வில் மும்முரமாக இறங்கியிருக்கிறார். அது மட்டுமின்றி, தொலைக்காட்சி நிகழ்ச்சிக் கலந்துரையாடல்களில் ரஜினி சார்பாகக் கருத்தியல் விவாதம் நடத்துவதிலும் நிர்வாகிகள் சமீப காலமாக பங்காற்றி வருகிறார்கள்.
பொருளாதார நெருக்கடி, விலையேற்றம், உட்கட்சிக் குழப்பங்கள் எனத் தமிழகம் திணறிக் கொண்டிருக்கும் நேரத்தில், ரஜினியின் அரசியல் நுழைவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை .
தமிழக மக்களுக்கான வளர்ச்சி குறித்து ரஜினி கொண்டிருக்கும் அக்கறை பற்றி இனி வரும் காலங்களில் அவரின் அரசியல் கொள்கைகளும் கோட்பாடுகளும் உரக்கச் சொல்லும் மீனவர்கள் நலம் சார்ந்த என்னவிதமான திட்டங்கள் இருக்கின்றன என்பது பற்றியும், மீனவர்கள் பற்றியான அவரின் பார்வை எப்படி இருக்கிறது என்பது பற்றியும் அவரின் கொள்கை விளக்கங்கள் உணர்த்தும்.
ரஜினியின் இலங்கைப் பயணம் சில அமைப்புகளால் தடைபட்டபோது, தமிழக மீனவர்களின் இன்னல்களைத் தீர்க்க கிடைத்த வாய்ப்பு பறிபோய்விட்டதே என ஆதங்கப் பட்டார். அந்த ஆதங்கம் அவரின் அரசியலில் மீனவர்களுக்கான விடியலாக அமைந்தால் நல்லது.