தலையங்கம்
மெரினா லூப் சாலை மீனவர்களுக்கே....
மெரினா கடற்கரையில் தற்போதைய நிலையில் 1,962 கடைகள் இயங்கி வரும் நிலையில், அவற்றை ஒழுங்குபடுத்தும் விதமாக 27.04 கோடி ரூபாய் செலவில் 7 அடி நீளம்,3 அடி அகலத்திலான ஒரே மாதிரியான 900 கடைகளை மாநகராட்சியே அமைத்து கொடுத்து ஸ்மார்ட் கார்டுகள் விநியோகிக்க இருப்பதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்திருந்தார்.
மேலும், கலங்கரை விளக்கம் அருகில் 2 ஏக்கர் பரப்பளவில் மீன் வியாபாரிகளுக்கு ரூபாய் 66லட்சம் செலவில் 300 தற்காலிக மீன் விற்பனை கடைகள் அமைக்கப்பட உள்ளதாகவும், கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்திடம் உரிய அனுமதி பெற்ற பின் நிரந்தர மீன் அங்காடி அமைக்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மாநகராட்சி கொடுத்துள்ள விண்ணப்பத்தை பரிசீலிக்குமாறு கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதி பதிகள், மெரினா கடற்கரையில் மாநகராட்சி சார்பில் அமைத்து கொடுக்கப்படவுள்ள புதிய கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு கண்டிப்புடன் தவிர்க்கப்பட வேண்டுமெனவும், அதை மாநகராட்சி அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டுமெனவும் அறிவுறுத்தி கடைகள் வடிவமைப்பு மற்றும் எத்தனை கடைகளுக்கு அனுமதி தொடர்பான விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய மாநகராட்சிக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை வரும் 22ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். இந்த நிலையில் மாநகராட்சியின் இந்த முடிவிற்கு நொச்சிக்குப்பம், பட்டினப்பாக்கம் பகுதி மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தென்னிந்திய மீனவர் நலச்சங்கம் சார்பில் கடற்கரை மண்டல ஒழுங்குமுறை குழுமத்திடம் அளிக்கப்பட்ட புகார் மனுவில், ஏற்கனவே மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் முதல் பட்டினம் பாக்கம் வரைவுள்ள லூப் சாலை திட்டத்திற்காக பெருநகர சென்னை மாநகராட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதில் ஏற்கனவே இருக்கும் தார் சாலையை அகற்றி சிமென்ட் சாலை அமைக்க மட்டுமே முடியும், லூப்சாலையின்கிழக்கு பகுதில் நடைபாதை மற்றும் மழை நீர் வடிகால்வாய்கள் அமைக்க முடியாது என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தேசிய பசுமைதீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பிலும் லூப் சாலையின் கிழக்கு பகுதில் நடைபாதை மற்றும் மழை நீர் வடிகால்வாய்கள் அமைக்க முடியாது என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது.
ஆகவே லூப் சாலையின் கிழக்கு பகுதியில் நடைபாதை அமைக்க பெருநகர சென்னை மாநகராட்சிக்குசட்டத்தை மீறி அனுமதி வழங்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பொறுப்பாசிரியர்