இஸ்ரோ உதவியுடன் மீனவர்களின் படகுகளில் நவீன கடற்பயண கருவிகள்


வேளாண் கௌரவ ஊக்கத் தொகை திட்டத்தில் 6 கோடி பேருக்கு ரூ.12 ஆயிரம் கோடி நிதியுதவி: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு


பிரதமரின் வேளாண் கௌரவ ஊக்கத்தொகை திட்டத்தில் 6 கோடி விவசாயிகளுக்கு ரூ.12 ஆயிரம் கோடி விடுவிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.


கர்நாடக மாநிலத்துக்குள்பட்ட தும்கூரில் உள்ள அரசு இளநிலை கல்லூரித் திடலில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில், முற்போக்கு விவசாயிகளுக்கு மத்திய வேளாண் அமைச்சரின் வேளாண்தொழிலாளர் விருது, மாநில அரசுகளுக்கு பாராட்டு விருதுகளை பிரதமர் நரேந்திரமோடி வழங்கினார். இதன்பின்னர், வேளாண் கௌரவ ஊக்கத்தொகை திட்டத்தின் 3ஆவது தவணையை விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தும் திட்டத்தைத் தொடக்கிவைத்து, நரேந்திர மோடி பேசியது:


புத்தாண்டில் உணவு அளிக்கும் விவசாயிகளைச் சந்திப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக 130 கோடி இந்திய மக்களின் சார்பில் விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.


பிரதமரின் வேளாண் கௌரவ ஊக்கத்தொகை (பிஎம் கிசான்) திட்டத்தில் நாடு முழுவதும் 6 கோடி விவசாயிகளுக்கு அவர்களின் வங்கிக் கணக்கில் 3ஆவது தவணைத்தொகை செலுத்தப்பட்டுள்ள வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வுக்கு கர்நாடகம் சாட்சியாக உள்ளது.


அரசியல் நோக்கத்தால் விவசாயிகள் நலன் பாதிப்பு: இந்தத் திட்டத்தில் 3ஆவது தவணையாக ரூ.12 ஆயிரம் கோடி விடுவிக்கப்பட்டுள்ளது . அரசியல் காரணங்களுக்காக ஒரு சில மாநிலங்கள் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தாமல் உள்ளன. இதுபோன்ற சில்லறை அரசியலால் விவசாயிகள் பலம் பெற்றதில்லை. விவசாயிகளின் தேவைகள், எதிர்பார்ப்புகளை புரிந்து கொண்டுள்ள பாஜக அரசு, அதற்கேற்ப திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.


அரசியல் நோக்கங்களால் விவசாயிகளின் நலன் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, அரசியலைக் கடந்து சம்பந்தப்பட்ட விவசாயிகளின் நலன் கருதி இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த மாநிலங்கள் முன்வரும் என்ற நம்பிக்கை உள்ளது. தென் இந்தியாவில் 30 விதை மையங்கள்: தோட்டக்கலை தவிர, பயறு, எண்ணெய் வித்து, தானியங்கள் உற்பத்தியில் தென்னிந்தியாவுக்கு அதிக பங்குள்ளது. இந்தியாவில் பயறு உற்பத்தியை அதிகரிக்க ஆங்காங்கே விதை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 30 மையங்கள் கர்நாடகம், ஆந்திரம், கேரளம், தமிழகம், தெலங்கானாவில் மட்டும் உள்ளன.


தென் இந்தியாவில் 30 விதை மையங்கள்: தோட்டக்கலை தவிர, பயறு, எண்ணெய் வித்து, தானியங்கள் உற்பத்தியில் தென்னிந்தியாவுக்கு அதிக பங்குள்ளது. இந்தியாவில் பயறு உற்பத்தியை அதிகரிக்க ஆங்காங்கே விதை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 30 மையங்கள் கர்நாடகம், ஆந்திரம், கேரளம், தமிழகம், தெலங்கானாவில் மட்டும் உள்ளன.


மீனவர்களின் நலனுக்காக... : மீன் வளத் துறை மேம்பாட்டுக்கு மூன்று கட்டங்களில் அரசு செயலாற்றி வந்துள்ளது. கிராம அளவில் மீனவர்களுக்குகடனுதவி அளித்து மீன்பிடியை ஊக்குவித்து வருகிறோம். நீல புரட்சி திட்டத்தின்கீழ் மீன் பிடிப் படகுகளை நவீனமாக்கி வருகிறோம். மீன் வர்த்தகம் மற்றும் வணிகத்துக்கான நவீன உள்கட்டமைப்புகளை உருவாக்கி வருகிறோம். -


மீனவர்களை உழவர் கடனுதவி அட்டை திட்டத்தில் இணைத்திருக்கிறோம். மீன் விவசாயிகளின் நலனுக்காக பெரிய ஆறுகள் மற்றும் கடலில் புதிதாக மீன்பிடி துறைமுகங்களை அமைத்திருக்கிறோம். இது போன்ற நவீன கட்டமைப்புகளை உருவாக்குவதற்காக ரூ.7.50 ஆயிரம் கோடி சிறப்பு நிதி உருவாக்கப்பட்டுள்ளது. ஆழ்கடல் மீன்பிடிக்கு ஏற்ப மீனவர்களின் படகுகள் நவீனமாக்கப்பட்டுள்ளன. இஸ்ரோவின் துணையுடன் மீனவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடற்பயண கருவிகள் படகுகளில் பொருத்தப்பட்டுள்ளன.


விவசாயத்தில் மாற்றம்: நாட்டில் உள்ள ஏழைகளுக்கு ஒரு ரூபாய் நிதி ஒதுக்கினால், பயனாளிகளுக்கு வெறும் 15 பைசா மட்டும் கிடைத்த காலம் நமது நாட்டில் இருந்தது. ஆனால், பாஜக ஆட்சியில் இடைத்தரகர்கள் யாரும் இல்லாமல் பயனாளிகளுக்கு நேரடியாகப் பணம் அளிக்கப்படுகிறது. விவசாயத்தை உள்பிரிவுகளாகக் காணாமல், அதை ஒருங்கிணைந்து அணுகும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. அரசு ஒதுக்கும் நிதி முழுமையாக ஏழைகளுக்குச் சென்றடைவதை எனது அரசு உறுதி செய்துள்ளது.


கடந்த பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நீர்ப்பாசனத் திட்டங்கள் தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளன. பயிர்க் காப்பீடு, மண் வள அட்டை, 100 சதவீத வேம்பு பூசப்பட்ட யூரியா ஆகிய திட்டங்களை விவசாயிகளின் நலன்கருதி முக்கியத்துவம் அளித்து மத்திய அரசு செயல்படுத்துகிறது.


மத்திய அரசின் நடவடிக்கையால் இந்தியாவில் இருந்து நறுமணப் பொருள் உற்பத்தி, ஏற்றுமதி கணிசமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் நறுமணப் பொருள் உற்பத்தி 2.5 மில்லியன் டன் அளவுக்கும், எற்றுமதி ரூ.15 அயிரம் கோடியில் இருக்கக. 19 ஆயிரம் கோடியாகவும் உயர்ந்துள்ளன.


நாட்டின் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கில், வேளாண் தொழிலாளர் விருதுகளில் ஊட்டச்சத்து தானியங்கள், தோட்டக்கலை, இயற்கை விவசாயம் போன்ற பிரிவுகளை சேர்க்க உத்தரவிட்டுள்ளேன். இதன்மூலம் சம்பந்தப்பட்ட துறைகளில் மாநிலங்களும், விவசாயிகளும் சிறப்பாக செயலாற்ற முடியும். எனது அரசு எடுத்து வரும் முயற்சிகளால் வேளாண்விளைச்சல் அதிகரித்துள்ளது என்றார்.


விழாவில் கர்நாடகத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட சில விவசாயிகளுக்கு உழவர்கடன் அட்டையையும் (கேசிசி) பிரதமர் மோடி அளித்தார். இதேபோல் தமிழகத்தை சேர்ந்த குறிப்பிட்ட சில மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி படகு மற்றும் மீன்பிடி படகு டிரான்ஸ்பான்டர்களை மோடி வழங்கினார்