தரைமேல் பிறக்க வைத்தான் - எங்களைத் தண்ணீரில் பிழைக்க வைத்தான்

தலையங்கம்



தமிழகம் தீர்க்க முடியாத பல பிரச்சனைகளின் விளை நிலம். எண்ணற்ற பிரச்சனைகள் இருப்பினும் முதன்மையான இடத்தை பிடித்திருப்பது தமிழக மீனவர் பிரச்சனை தான்.


இப்படிச் சொல்வதற்கும் காரணம் இருக்கிறது. ஏனென்றால் தமிழக மீனவர் பிரச்சனை என்பது சமூகம் - பொருளாதாரம் - அரசியல் - இனம் - மொழி போன்ற எல்லாவற்றோடும் தொடர்பு கொண்டதாக இருக்கிறது.


கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுவதாகக் கூறி கைது செய்யப்படுவதும், படகுகள் மற்றும் மீன் பிடி சாதனங்கள் பறிமுதல் செய்யப்படுவதும், அம்மணமாக்கி அடித்து விரட்டப்படுவதும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன.


இதனால் தமிழக மீனவர்கள் மனம், உடல், பொருளாதார ரீதியாகப் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். கடலுக்குச் செல்லும் மீனவர்கள் கரைக்குத் திரும்புவார்கள் என்கிற உத்தரவாதத்தை தமிழக அரசோ அல்லது இந்திய அரசோ அவ்வளவு எளிதில் தந்துவிட முடிவதில்லை.


மூன்று பக்கம் கடலோடு விரிந்து கிடக்கும் இந்தியா என்னும் துணைக் கண்டத்தில் தமிழகம் ஓர் அங்கம் என்பது பற்றியோ, தமிழக மீனவர்கள் இந்திய குடிமக்கள் என்பது பற்றியோ இலங்கை அரசுக்கு எந்தவித அக்கறையும் இல்லை . இதனால் தமிழக மீனவர்களுக்கு எதிராகத் துப்பாக்கி தூக்கும் இலங்கை கடற்படையினருக்கும் எந்தவித அக்கறையும் அவசியப்படவில்லை.


தமிழகம் தவிர்த்த பிற மாநில மீனவர்கள் கடலுக்குச் சென்று கரைக்கு பத்திரமாகவே திரும்புகின்றனர். ஆனால் தமிழக மீனவர்கள் கரைக்கு திரும்புவார்கள் என்ற நம்பிக்கையை மட்டும் இந்திய அரசு கொடுப்பதில்லை.


ஏனென்றால் தமிழக மீனவர்களை இந்தியக் குடிமக்களாக மீனவர்களாக இந்திய அரசு கருவது வதில்லை . அவர்களை தமிழர்களாகவே பார்க்கிறது. தட்டிக்கேட்க ஆளில்லாத தமிழர்கள் மீது தடிக்கம்புகள் பாயத்தானே செய்யும்?


தமிழக மீனவர்கள் மீது மட்டுமே இந்த ஒருதலைப்பட்சம் காட்டப்படுவதன் காரணம் என்னவாக இருக்க முடியும்? தேசியக் கட்சிகள் (அது எதுவாக இருந்தாலும்) தமிழகத்தில் கனவில் கூட ஆட்சி அமைக்க முடியாது என்கிற ஏமாற்றத்தில் வந்ததாகக் கூட இருக்கலாம்.


தமிழக மீனவர்கள்தங்களுக்கு எதிரானபாரபட்சத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கு அவர்கள் அரசியல் ரீதியாக ஒன்றிணைய வேண்டும். ஒற்றுமையின் குரல்தான் ஓங்கி ஒலிக்கும்.


முதல் குரலாக 'நமது மீனவன் ' தொடங்கி வைக்கிறது. எங்களோடு கரம் கோர்த்து களப்பணியாற்ற மீனவ சமூகத்தினரின் ஆதரவை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம். நன்றி.


- பொறுப்பாசிரியர்


நமது மீனவன்