பிரிதலும் பிரிதல் நிமித்தமும்

| பித்துக்குளியின் கடிதங்கள்


வானம் பார்த்தல் என்பது பித்துக்குளிக்கு பிடித்தமான ஒன்று. அவன் ரசிப்பது மேகக் கூட்டங்களை அல்ல. விண்மீன்களை அல்ல. நிலவை அல்ல. எல்லாவற்றையும் தாண்டி, இருள் பரப்புக்குள் பரந்து கிடக்கும் சூன்யம் அவனை எப்போதுமே கிளர்ச்சியடையச் செய்யும்.


அலையின் அலறல் நிறைந்த மணற்பரப்பில் தோள்பையைத் தலைக்கு வைத்துக் கொண்டு படுத்துக் கிடக்கும் அவன் கையில் கடிதமொன்று காற்றில் படபடத்துக் கொண்டிருக்கிறது.


கனி,


நீ உண்டென்று சொன்னதற்கும் இல்லையென்று சொன்னதற்கும் இடையில் உழன்று கொண்டிருக்கும் பேரிடைவெளியை நிரப்பிக் கொண்டிருக்கிறது நரகம்.


என் பிச்சைப் பாத்திரத்தில் உன் கனிவும் காதலும் மட்டுமே நிரம்பி வழிகிறது. கரை தொட்டு மீளும் அலையைப் போலே என் உயிர் தொட்டுத் தழுவும் உன் நினைவுகளை என்ன செய்ய?


என் காது மடலோரமாய் உன் மூச்சுக்காற்றிட்ட கோலங்கள் நான் கண் மூடும், போதெல்லாம் காட்சியென விரிந்து தூக்கம் தொலைக்கிறதே...!


என் சுட்டுவிரல் பிடித்து என்னோடு நீ சுற்றி வந்த தெருக்களிளெல்லாம் உன் இரகசியக் குரல் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது.


நீ என்னருகில் உள்ள போதும், இப்போது இல்லாத போதும் எனை ஆளும் ஞானச் செருக்கு நாம் சந்தித்த கடற்கரைக்கே எனையிழுத்துக் கொண்டு வந்திருக்கிறது.


சுவையூறும் உள்நாக்கில் நீ தொட்டு வைத்துச் சென்ற காதல் சுவைக்கு நான் அடிமையாகிப் போன நாளில் தான் உன் திருமணம் குறித்தான செய்தி வந்தது.


இப்படி என்னைப் புலம்ப வைத்துக் கொண்டே இருக்கிறாய்.


கானல் நீரில் நீந்தி உனக்குள் மூழ்கிக் கொண்டிருக்கும் என்னைக் கரை சேர்த்து விட முனைகிறேன்.


தோற்றுப் போய்விட்டதாய் நான் கருதிக் கொள்ளவில்லை. நீயில்லை என் வாழக்கை என்றே நம் பிக் கொண்டிருக்கிறேன். உன்னுடன் வாழ்ந்த பொழுதுகளையும் உன்னுடன்கடந்த வெளிகளையும் தான் எதிர் கொள்ள முடியவில்லை.


அடர்ந்த மரமொன்றில் காற்றுக் கூட கட்டாயப்படுத்தாமல் தன்னைத்தானேவிடுவிடுத்துக் கொள்ளும் ஒரு முதிர்ந்த இலையைப் போலே நான் உதிர்ந்து கொள்கிறேன் உன்னிடமிருந்து.


அடர்ந்த மரமொன்றில் காற்றுக் கூட கட்டாயப்படுத்தாமல் தன்னைத்தானேவிடுவிடுத்துக் கொள்ளும் ஒரு முதிர்ந்த இலையைப் போலே நான் உதிர்ந்து கொள்கிறேன் உன்னிடமிருந்து.


மீண்டும் ஒட்டிக் கொள்ளப் போவதில்லை.


உனக்கானவாழ்க்கையை நீ அமைத்துக் கொள்ளும் போது - உன் சுற்றமும் நட்பும் சூழ வந்து வாழ்த்தும் போது நானும் இருக்கிறேன் கொஞ்சம் தொலைவில்.


இப்படிக்கு,


கர்வன்


- சகி. சக்கரவர்த்தி (+91 96771 95543)


email : sahi.sakkaravarthi@gmail.com