மீன்பிடித் தொழில் பற்றி நமக்கு என்ன தெரியும்?
நாம் தினந்தோறும் உட்கொள்ளும் மீன் எங்கிருந்து வருகிறது? யார் இந்த மீன்களைப் பிடிக்கிறார்கள்? எந்த மாதிரியான நிபந்தனைகளுடன் மீன் உற்பத்தி நடக்கிறது? யார், எந்தச் சூழ்நிலையில், எந்த மாதிரியான கட்டுப்பாடுகளுடன் மீன்பிடித் தொழிலை ஒழுங்குபடுத்துவது?
மேலோட்டமாகப் பார்க்கும்போது இக்கேள்விகளுக்கான பதில்கள் சுலபமாகத் தெரியலாம். ஆனால், இவை கடலினும் ஆழமானவை. மீன்பிடித் தொழிலைப் பற்றி அறிய வேண்டும் என்றால், மீன்களைப் பற்றியும் மீனவர்கள் பற்றியும் மட்டுமல்லாமல் இந்த இரண்டையுமே முறைப்படுத்தும் பொறுப்பில் உள்ள தமிழ்நாடு மீன்வளத்துறை பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும்.
வெப்பமண்டல மீன் உயிரியல்
வெப்பமண்டலக் கடலில் வாழும் மீன்கள்மிதவெப்பச்சூழலில் வாழும் மீன்களுடன் ஒப்பிடும் போது மிகவும் தனித்துவம் மிக்கவை. வட அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும் போது வெப்பமண்டல மீன்கள் வித்தியாசமானவையும் கூட . ஏனென்றால் மிதவெப்ப மண்டலங்களில் மீன்களிடையே பன்முகத்தன்மை குறைவு.
ஆனால், அவற்றின் எண்ணிக்கை மிக அதிகம். அதற்கு எதிர்மாறாக வெப்பமண்டலக் கடலில், அதாவது இந்திய, ஆப்பிரிக்க, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மீன்களின் பன்முகத்தன்மை அதிகமாகவும் மிதவெப்பக் கடலுடன் ஒப்பிடும் போது மீன் எண்ணிக்கை குறைவாகவும் உள்ளது.
பருவகால மாற்றத்தால் ஏற்படும் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப வெப்பமண்டலத்தில் வாழும் மீன்கள் இனப் பெருக்கத்தில் ஈடுபடுகின்றன.
அதாவது ஒரு சுண்டு விரல் அளவு இருக்கும் நெத்திலி மீனில் இருந்து , மனிதர் களைவிடப் பெரிதாக வளரும் சுறா மீன்வரை அனைத்து மீன் வகைகளும் ஒரு சில காலகட்டங் களைச் சார்ந்தே இனப்பெருக்கத் தில் ஈடுபடுகின்றன.
கரைப் பகுதியில் இனப் பெருக்கம் செய்து, கரைப்பகுதியில் உணவு தேட வரும் சில மீன் வகைகள் மிகவும் முக்கிய மானவை. இதில் தீவனமீன்களாகத் திகழும் நெத்திலி, மத்தி, பொருவா போன்ற சிறிய மீன் இனங்கள் கடல் உணவுச் சங்கிலியின் பகுதியாக மட்டும் இல்லாமல், கரையை ஒட்டி மீன் பிடிக்கும் மீனவர்களுக்கும் முக்கிய உணவுப் பொருளாகவும், அவர்களுக்குத் தினப்படி வருமானத்தை ஈட்டித்தருபவையாகவும் உள்ளன. ஆனால் தற்போது இந்தத் தீவன மீன்களின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
அறிவியல் சொந்த நாட்டு மீன்களைப் பற்றி ஆழ்ந்து ஆராயாமல், கண்மூடித்தனமாக மேற்கத்திய நாடுகளில் கண்டறிந்த மீன் பிடி அறிவியலையே பயன்படுத்தி வருகிறது.
மீனவர்களின் சமூக - பொருளாதார வாழ்க்கை
ஏற்கெனவே சொன்னது போல் வெப்பமண்டலக் கடலின் மீன் பன்முகத்தன்மைக்கு ஏற்ப, மீனவ மக்களும் வெவ்வேறு முறைகளில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவருகின்றர்.
முக்கியமாகச் சிறு தொழில் மீன்பிடித்தலில் ஈடுபட்டிருக்கும் மீனவர்கள் பல மீன் இனங்களைப் பல வகையான வலைகளைப் பயன்படுத்திப் பிடிப்பதை முக்கிய மாகச் சுட்டிக்காட்டலாம் . உதாரணத்துக்கு வீச்சு வலை, சாட்டு வலை, பெரிய வலை, மணி வலை, பரு வலை, சூடை/மத்தி வலை, நண்டு வலை போன்ற வெவ்வேறு வலைகளை வைத்து மீன்பிடித் தொழில் நடை பெறுகிறது. இங்கு இதைச் சுட்டிக்காட்டுவதன் அவசியம் சிறு தொழில் மீன் பிடித்தலை எப்படி முறைப்படுத்துவது என்பதற்காகத்தான்.
மீன் பன்முகத்தன்மை காரண மாகவும், ஒருசிலபருவகாலங்களில் மட்டும் மீன் பெருகுவதாலும் மீன் பிடிக்கும் தன்மை இந்த மாற்றங்களை ஒட்டியே அமைந்துள்ளது. இதனாலேயேமீன்பிடித்தலை நிச்சயமற்றதாகவும், அதேநேரம் உற்சாகமூட்டும் ஒரு தொழிலாகவும் மீனவர்கள் கருதுகின்றனர். ஏனென்றால் கண்ணுக்குத் தென்படாத ஒரு வளத்தைத் தங்கள் திறன்களை மட்டுமே பயன்படுத்திச் சேகரிப்பதுதான். அதேநேரம், ஒரு சில காலத்தில் மட்டும் மீன் கிடைப்பது மீனவச் சமூகங்களின் நிச்சயமற்ற பொருளாதார வாழ்க்கையையும் வெளிப்படுத்துகிறது.
அதுமட்டும் இல்லாமல், ஒரு மீனவன் அரசுக் கட்டுப்பாட்டில் இல்லாத கடல் பகுதிக்குச் சென்று மீன்பிடித்தலில் ஈடுபடும் போது தனது வாழ்க்கையைப் பணயம் வைத்துத் தொழில் செய்கிறான். கடலில்இருக்கும் போதோ அல்லது கரையில் ஏதேனும் துன்பம் நேரிட்டாலோ அவர்களைக் காப்பற்ற முன்வருவது யார் ? இன்னொரு மீனவன்தான். அதனால் தான்மீனவச்சமூகத்தில் மிகவும் நெருக்கமான பிணைப்புகளைக் கொண்ட உறவைக் காண முடியும்.
தமிழ்நாடு மீன்வளத் துறை: வரலாறு மற்றும் ஆணை
தமிழ்நாட்டின் மீன்வளத் துறை 1905 ம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தொடங்கியது. அப்போதைய ஆங்கிலேய அரசுமீனவர்களின் மீன்பிடிமுறை மிகப் பழமை யானதாக உள்ளதாகவும், அதை மேம்படுத்த வேண்டும் என்ற கட்டாயத்தில் புதிய மீன்பிடி முறைகளை, அதாவது மிதவெப்ப மண்டலத்தில் பயன்படுத்தும் மீன்பிடி முறைகளை ஆராயத் தொடங்கியது. இழுவை மடிகளைப் பொருத்திய விசைப்படகு வைத்து அதிகம் மீன் புழங்கும் இடங்களைக் கண்டறிந்தது.
ஆரம்ப கட்ட பரிசோதனைகளை வைத்து அப்போதைய ஆங்கிலேய அரசு இந்தியா இழுவை மடிகள் பயன்படுத்த ஒரு தகுந்த இடமாக இருக்கும் என முடிவு செய்தது. தமிழ்நாடு இழுவை மடிகள் பொருத்திய விசைப்படகைப் பயன்படுத்துவதில் முதல் மாநிலமாகத் திகழ்ந்தது.
நாட்டு விடுதலைக்குப் பின் இந்திய அரசின் முதல் திட்டக்குழுவின் நோக்கம் மீன் வளர்ச்சியை அதிகரித்து, மீனவ மக்களை ஏழ்மையில் இருந்து வெளியே கொண்டு வரத் திட்டமிட்டது. இதற்கு இழுவை மடிகள் பொருத்திய விசைப்படகுகளைப் பயன்படுத்த வேண்டுமென்பதை நியாயப்படுத்தியது. ஆனால் ஐந்தாவது திட்டக்குழுவின் முடிவில் மீனவச் சமுதாயங்கள் வறுமையில் தள்ளாடிக்கொண்டிருந்த போதிலும், அந்நியச் செலாவணியை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கமாக மாறியது.
வளர்ச்சி ஒரு பக்கம் இருக்க மீன்வளத் துறை மீன் வளங்களைப் பாதுகாக்கும் நோக்கத்தையும் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு மீன்வளத்துறை மீன் வளத்தைப் பாதுகாக்க மேற்கொள்ளும் ஒரே முயற்சி கோடை காலத்தில் 45 நாள் மீன்பிடித்தலுக்குத் தடை விதிப்பது. இந்த 45 நாள் தடைக் காலத்தில் மீன்கள் குஞ்சு பொரிப்பதாகவும், அதைப்பாதுகாக்கவே இந்த மீன்பிடித் தடை என்றும் சொல்கிறது மீன்வளத் துறை. இந்த ஒரு விளக்கம் ஏராளமான அனுமானங்களை உள்ளடக்கியது.
ஏனென்றால் எல்லா மீன்களும் இந்த 45 நாட் களுக்குள் இனப்பெருக்கம் செய்கின்றன என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது . இந்தத் தடைக்கால நடவடிக்கை 1983ல் நிறை வேற்றப்பட்டது. அதற்குப் பின் கடல் சூழலில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனாலும் நம் மீன்வளத்துறை அதே பழைய தர்க்கத்தைப் பயன்படுத்தி மீன்பிடிக்கத் தடை விதிப்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது. மேற்கூறிய ஆதாரங்களை வைத்துப் பார்க்கும்போது இந்த 45 நாள் தடைக்காலம் மீன்வளத்தைப் பாதுகாக்கும் முயற்சியின் ஒரு கண்துடைப்பு நடவடிக்கை என்று கருதலாம்.
மீன் வள மேலாண்மை: சில எண்ணங்கள்
முதலில் நம் கடலில் வாழும் மீன் இனங்களைப் பற்றி நமக்குப் பெரிதும் தெரியாது என்பதை ஒத்துக்கொள்வது நல்லது. இது வெப்பமண்டல மீன் சூழலியல் பற்றி ஆழ்ந்து ஆராயவும், புரிதலை மேம்படுத்தவும் சில வாய்ப்புகளை ஈட்டித்தரும். நிறைய மீன் இனங்கள் இப்பொழுது காணாமல் போய் விட்டதாக மீனவர்கள் கூறுகின்றனர். மீன்பிடித்தலை முறைப்படுத்த முதலில் மீன் உயிரியலைப் பற்றி அறிய வேண்டும். அதாவது மீன் என்ன உணவை உட் கொள்கிறது , பருவ நிலைக்கு ஏற்ப எங்கு நீந்துகிறது, எந்தக் காலகட்டத்தில் இனப் பெருக்கத்தில் ஈடுபடுகிறது என்பது போன்ற அடிப்படைக் கேள்விகளுக்கு, சில மீன் இனங்களைப் பற்றித் தகவல் கவல் கிடைத்தாலும் பெரும்பாலான மீன்களைப் பற்றி நமக்குத் தகவல்கள் இல்லை . இதை முழுமையாக அறிந்தால் எந்தக் காலத்தில், எந்த இடத்தில், எந்த வகையான வலைகளைப் பயன்படுத்த வேண்டும், எவற்றைப் பயன்படுத்தக்கூடாது என்பதை அறிய முடியும்.
இரண்டாவதாக, மீனவச் சமூகங்களின் கொள்கை உருவாக்கச் செயல்முறைகளில் பங்கேற்பது. இந்தியாவைப் பொறுத்தவரை மீன் அறிவியல் என்பது களத்துக்கு நேரடித் தொடர்பில்லாத வல்லுநர்களை மட்டுமே கொண்டு இயங்குகிறது. கடற்கரையில் பிறந்து கடல் 5 தொழில் செய்து அதையே வாழ்க்கையாகக் கொண்டிருக்கும் மீனவர்களுக்கு ஒரு சிறந்த ஆராய்ச்சியாளரைவிட அனுபவ அறிவு அதிகம் என்பதை முதலில் உணரவேண்டும்.
மூன்றாவதாகத் தற்போது உள்ள மீன்வளத்தைக் கட்டுப் படுத்தும் அம்சங்களை மாற்றி அமைக்க வேண்டும். மீன் உற்பத்தி அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கம் தவறல்ல. ஆனால், உயிர்ச் சூழலையும் அதில் வசிக்கும் மீன்களையும் அதில் வசிக்கும் மன்களையும் நம்பி வாழும் எண்ணற்ற மக்களையும் பாதிக்கும் வகையில் மீன்வளத்தைக் கட்டுப்படுத்தும் அம்சங்கள் அமைந்துள்ளன. உலகெங்கிலும் மீன்பிடித்தல் குறைந்து வரும் நிலையில் இந்தியாவைப் பொறுத்தவரை மீன்பிடிக்கல் அதிகரிக்க வருகிறது. இது எப்படிச் சாத்தியம்? மீன்பிடித் தொழிலின் உயிரியல், சமூகம்,பொருளாதார நிலைமையை உற்று ஆராயாமல் நம் மீன்வளத் துறை அரசியல் நோக்கங்களில் முடங்கிக் கிடக்கிறது.
தற்போது நாம் உணர்ந்து வரும் பருவநிலை மாற்றங்களால் நம் உணவுப் பாதுகாப்பைச் சீர்குலைப் பதற்கு மிக அதிகச் சாத்தியம் இருக்கிறது. மீன்பிடித் தொழில் உலை உணவு உற்பத்திக்கும், அதிகரித்து வரும் மக்கள்தொகைக்கும் வேலை வாய்ப்பு தரும் ஒரு தொழிலாக இருக்கும்.
அதற்கு நம் மீன்வளங்கள் நன்றாக மேம்படுத்த, வளங்க சரியான முறையில் எவ்வாறு பரவலாக்குவது, எவ்வாறு நீண்ட காலப் பாதுகாப்பு வழங்குவது எனக் கண்டறிய வேண்டியது நம் கடமை.
இது போன்ற கேள்விகளுக்கு நாம் நமக்கு உடனடியாக விடை தெரியா விட்டாலும் இவற்றைக் கேட்பது அவசியம். இப்போது சொல்லுங் கள், நாம் சாப்பிடும் மீன் எப்படி வருகிறது என்பது பற்றியும் அதைச் செய்யும் மீன்பிடித்தொழில் எப்படி இருக்கிறது என்பது பற்றியும் நமக்கு என்ன தெரியும்?
நன்றி : - இந்து தமிழ் திசை