நியாயமான இழப்பீடு வழங்க வேண்டும்... அரசுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் வேண்டுகோள்!
சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வு நமக்குக் கொஞ்சம் குறைவுதான். அப்படி இருக்கும்போது கடல் மீதுதான் கரிசனம் வந்துவிடுமா என்ன? நவீன வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களிடம் கடல் மற்றும் கடல்சார் மக்களின் வாழ்வியல் பாதுகாப்பு தொடர்பாக நமது மீனவனின் பிரத்யேக நேர்காணல்...
1.கடல்சார் வணிகத்தை மேம்படுத்த ஒரு நவீன வேளாண் விஞ்ஞானியாக தங்களின் யோசனை என்ன?
கடற்கரையோடு இணைந்த கடற்பரப்பு மற்றும் நிலங்களின் ஒருங்கிணைந்த மேலாண்மை குறித்த பல பரிந்துரைகளை ஏற்கனவே வழங்கியிருக்கிறேன். அவற்றைச் செயல்படுத்துவது மிகவும் இனிறியமையாததாகும்.
2. இயற்கைப் பேரழிவுகள் பெருகிக்கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில் கடல் வாழ் தாவர உயிரினங்களின் பாதுகாப்பின் முக்கியத்துவம் என்ன ?
கடல்வாழ் தாவர உயிரினங்களின் வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பது சதுப்பு நிலக் காடுகளை பாதுகாப்பதில்தான் அடங்கியிருக்கிறது. இந்த விழிப்புணர்வு கடற்கரை வாழ் சமூகங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
3. சுனாமி போன்ற பேரழிவுகளிலிருந்து பாதுகாப்பதற் கான விஞ்ஞான ரீதியிலான தீர்வு?
சுனாமி போன்ற பெரிய இயற்கை அழிவுகளை நாம் தடுக்க முடியாது. மாறாக அவற்றால் ஏற்படும் அழிவுகளைக் கட்டுக்குள் வைக்கலாம்.
4.மீன் பிடித்தல் என்பது கடலில் செய்யப்படும் வேளாண்மையே நிலத்தில் பசுமைப் புரட்சி போல, கடலில் நீலப் புரட்சி சாத்தியமா?
கடற்கரைப் பகுதிகளில் மீன் பண்ணைகளை உருவாக்குவது போல் நாட்டுப் பகுதிகளிலும் மீன் வளர்ப்புப் பண்ணைகளை உருவாக்கலாம். இதன் வழி ஒரு நீலப் புரட்சியை உருவாக்க முடியும்.
5. இயற்கை என்ற அடிப்படையில் கடல் வளத்தைப் பாதுகாப்பதில் மரபு சார் மீன்பிடித்தல் உதவுமா ? நவீனக் கருவிகள் கொண்டு மீன்பிடிப்பது கடல் வளத்தை எந்த அளவுக்குப் பாதிக்கிறது?
நவீன விசைப்படகு மீன்பிடித்தல் மீன்களின் இயற்கையான இனப்பெருக்கச் சுழற்சியைத் தடுக்கிறது. மேலும் இது கடற்பாசிகளையும் அழிக்கிறது. எனவே அதிநவீன விசைப்படகுகளைப் பயன்படுத்துவதை முழுவதும் தவிர்க்க வேண்டும். அதற்கு மாறாக நவீனத் தொழில் நுட்பங்களை பயன்படுத்தி கடல் அலைகளின் வீச்சு மற்றும் மீன்பாடு ஆகியவற்றைத் துல்லியமாய்க் கணிக்க முடியும்.
6.மீனவர்களுக்கு அவசியப்படும் முக்கியத் திட்டங்களாக அரசுக்குத் தங்களின் பரிந்துரை என்ன ?
மீன் வளர்ச்சித்துறையில் மீனவர்களுக்கான பல நலத்திட்டங்கள் உள்ளன. மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலங்களில் மீன் பிடித்தலைத் தவிர்ப்பதால் மீனவர்களுக்கு ஏற்படும் வாழ்வாதாரச் சிக்கலை எதிர்கொள்ள நியாயமான இழப்பீடு வழங்க வேண்டும் என்று பரிந்துரை செய்திருக்கிறேன். அப்பேற்பட்ட திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் வளம் குன்றா மீன்பிடித் தொழிலை உருவாக்குவது சாத்தியமாகும்.