அதோ தெரியுது பார் கரை (சிறுகதை)
தென் கிழக்கு வங்கக் கடலிலும் அதையொட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளிலும் நிலவுகிற மேலடுக்குச் சுழற்சியின் காரணமாக அடுத்த 24மணிநேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகும். அது தீவிரமடையும் பட்சத்தில் தாழ்வு மண்டலமாக மாறி புயலாக மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. புயல் தீவிரமடைந்தால் சென்னை மற்றும் அதையொட்டிய ஆந்திரக் கடற்கரையை நோக்கி நகரும். வழுவிழந்தால் அந்தப் புயலானது ஒரிஸா கடற்கரை நோக்கி நகர்ந்து விடும்''
தமிழக அரசு இலவசவண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிக்குள் எந்தவித முக அசைவும் காட்டிக் கொள்ளாமல் வானிலை அறிக்கை சொல்லிக் கொண்டிருந்தார் சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன்.
புள்ளிப் புள்ளியாய் ஒளிர்ந்து கொண்டிருந்த அந்த செய்தி சேனலை மாற்றிவிட்டு, ரிமோட்டை கட்டில் மீது தூக்கி எறிந்தாள் வளர்மதி.
“ கவுர்மண்டு ஓசில டி.வி. குடுக்குது, ... கேபிள் கனெக்ஷனுக்கு நூத்தி முப்பது ஓவாய தண்டத்துக்கு அழவேண்டியிருக்கு... ஒரு சேனலாச்சும் உருப்புடியா வருதா... இது அரசு கேபிளாம்... மண்ணாங்கட்டி...
அடுத்த சேனில் இளையராஜாவின் குரலுக்கு கமலஹாசனும் ராதாவும் குலுக்கிக் கொண்டிருந்தார்கள்.
"ஏய்... உன்னைத்தானே... ஏய்... உன்னத் தானே நீயெந்த ஊரு... என்னோடு ஆடு...
ஒரு பெரிய கேனிலிருந்து டீசலை ஊற்றிக் கொண்டிருந்த ஆசீர்வாத்திற்கு பக்கத்தில் வந்து நெருக்கமாக உட்கார்ந்தாள் திரேசாம்மாள்.
பிறைவேட்டு இஸ்கூல்ல படிச்சாத்தான் புள்ள புத்திசாலித்தனமா படிக்கும்னு பெரிய இவன்மாட்டுக்க போய்ச்சேத்தியே... புள்ள ரெண்டு நாளா பீசு கட்டலேன்னு மருகிக்கிட்டுக் கெடக்கு... என்ன ஏதுன்னு கேட்டியா...”
“ஏத்தா... அப்டியாத்தா வெஷயம்...?''
* போப்பா அங்கிட்டு ... தெனம் அசிங்கப்படுத்துறாளுங்க... திங்கச் கெழம காசு தரலேன்னா ஸ்கூல்க்கு போக மாட்டேன் போ...''
ஆசீர்வாதம் இடது கையை முகத்துக்கு நேரே தூக்கி, மோதிர விரலில் மாட்டிக் கிடந்த ஒரு தங்க வளையத்தைப் பார்த்தார்.
“இந்தா பாருத்தா... இந்த மோதரத்த கழட்டிக்க... பீசு போக மிச்சத்துக்கு பிரியப்பட்டத வாங்கிச் சாப்பட்டுக்க.. என்ன சொல்ற...''
“ம்ஹும்...''
மகள் செர்லின் ரோஸி சலித்துக் கொண்டு, அப்பாவைப் பார்த்து முறைத்து விட்டு, திரும்பிப் படுத்துக் கொண்டாள். அவளின் கோபத்தின் அளவு அவள் சேனல் மாற்றும் வேகத்தில் தெரிந்தது.
''இன்னும் ரெண்டு நாள் கெடக்குலப்பா... பாத்துக்கலாம்... அப்பா கடலுக்குப் போயிட்டு வந்து ஒங்கைலயே காசக் கொடுத்துடறேன்... வச்சுக்க...''
சேனல் மாறும் வேகம் குறைந்தது.
“ஆசி... என்னப்பா இன்னும் வீட்டுக்குள்ள அடகாத்துக்கிட்டுக் கெடக்க.. வாப்பா சீக்கிரம்...''
“இரு சொலமான்... வந்துட்டேன்"
டீசல் கேனைத் தூக்கிக் கொண்டு வெளியே வந்தார் ஆசீர்வாதம். சுலைமான் பீடி புகைத்துக் கொண்டு நின்றிருந்தான். இன்னும் முழுதாய் விடிந்திருக்கவில்லை. இருவரும் கடலை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள்.
இருவரும் ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை. பீடியை கீழே போட்டு விட்டு சுலைமான் ஆசீர்வாதத்தைப் பார்த்தான்.
' 'என்னப்பா... கருக்கல்லயே கடுசா யோசிச்சுக்கிட்ருக்க...''
“ஒன்னுல்லப்பா... ரோஸிக்கு பீசு கட்டணும்... அதான்...''
"கட்டிரலாம், கட்டிரலாம்...''
சுலைமான் வலையைத் தூக்கி படகுக்குள் போட்டுவிட்டு, படகைக் கடல் நோக்கி நகர்த்த ஆரம்பத்தான. ஆசாவாதமும் சேர்ந்து கொள்ள படகு கொஞ்சம் கொஞ்சமாக கடலுக்குள் இறங்க ஆரம்பித்தது.
தள்ளாடிக் கொண்டிருந்தது படகு.மேகம் கருத்துக் கொண்டு வந்தது. காற்றின் வேகம் கொஞ்சம் அதிகமாகத்தான் இருப்பதாகத் தோன்றியது.
ஆசீர்வாதம் ஏதோ ஒரு சிந்தனையில் கடலையே வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தார். மிகச் சிரமப்பட்டு பீடியைப் பற்ற வைத்துக் கொண்ட சுலைமான் உள்ளங்கைக்குள் பீடியை மறைத்து வைத்துக் கொண்டு இழுத்து ஊதிக் கொண்டே இருந்தான்.
கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரும் தென்படுவதாக இல்லை. தொலைவில் காற்றின் ஓலம் கடலின் கதறலாகக் கேட்டுக் கொண்டே இருந்தது.
காற்றின் வேகம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. மேகம் கவிந்து இருள் சூழ்ந்து கொண்டிருந்தது.
சுலைமான் வானத்தைப் பார்த்தபடி,
"ஏம்பா... என்ன இன்னிக்கி மேகம் கொஞ்சம் அதிகமாகத்தான் மெரட்டுதே...''
“காலைலயே டி.வி.ல சொன்னான்... இன்னிக்கு ஏதோ புயல் வருதாம்...''
“நம்ம பார்க்காத புயலா... சுனாமிக்கே சுருக்கு வலை வீசினவிங்க நாங்க ...''
சுலைமான் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, இரைச்சலுடன் காற்று வேகமாகப் படகைக் கடந்து சென்றது. படகு நிலை கொள்ளாமல் தடுமாற ஆரம்பித்தது.
சொலை ஏதோ தப்பாத் தெரியுது... கௌம்பு, கௌம்பு...'' ஆசீர்வாதம் வேக வேகமாய் வலையை இழுக்க ஆரம்பித்தான். சுலைமான் படகை உயிர்ப்பிக்க முயற்சித்துக் கொண்டிருந்தான்.
சற்று நேரத்தில் பெருவேகத்துடன் சுழன்றடித்து வந்த காற்று, பேரிரைச்சலுடன் படகைத் தாக்கிச் சென்றது.
படகு சில மீட்டர் தொலைவுக்கு வீசப்பட்டுக் கவிழ்ந்து கிடந்தது. சுலைமானைக் காணவில்லை . கடலில் தூக்கி எறியப்பட்ட ஆசீர்வாதம் படகை நோக்கி விரைவாக நீந்த முயற்சித்தான்.
வலது கையில் வலியெடுத்துக் கொண்டிருந்தது. காற்றின் சுழற்சி குறைந்திருந்தது. ஆனாலும் நின்றபாடில்லை. மெதுவாக நீந்திப் படகை நெருங்கிக் கொண்டிருந்தான்.
கண்ணுக்கெட்டிய தூரம் வரைசுலைமானைக் காணவில்லை. கையில் வலி அதிகமாகிக் கொண்டே வந்தது. படகை நெருங்கி, கவிழ்ந்து கிடந்த படகைப் பிடித்துக் கொண்டு வலது கையைப் பார்த்தான்.
வலது கையின் மணிக்கட்டில் வலை அறுத்து சிறு கோடாக பிளந்திருந்தது. இரத்தம் கசிந்து கொண்டே இருந்தது.
சுலைமானைக் காணவில்லை. படகைச் சுற்றி தேடிப் பார்த்தான். சுலைமான் இருப்பதாகத் தெரியவில்லை . பெயர் சொல்லிக் கதறிப் பார்த்தான். அவன் குரல் அவன் காதுக்கே கேட்கவில்லை.
காற்றின் வேகம் கொஞ்சம் குறைந்திருப்பதைப் போலத்தான் தோன்றியது. கவிழ்ந்து கிடந்த படகைப் பிடித்துக் கொண்டு கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.
...
பேய்க்காற்று கொஞ்சம் குறைந்திருந்தது . எவ்வளவு நேரம் கடந்திருக்கும் என்கிற எந்தவித அனுமானமும் தோன்றவில்லை. ஆசீர்வாதம் கண்விழித்துப் பார்த்தான். தொலைவில் சுலைமான் நீந்தி வந்து கொண்டிருப்பது போல் தோன்றியது.
முகம் மலர அவனை நோக்கி விரைவாக நீந்த ஆரம்பித்தான். கையில் இன்னும் குருதி வழிந்து கொண்டே தான் இருந்தது . உடல் கொஞ்சம் சோர்வாகியிருப்பது போலத் தோன்றியது.
மனதில் வைராக்கியத்தை வரவழைத்துக் கொண்டு இன்னும் வேகமாக நீந்த ஆரம்பித்தான். நெருங்க நெருங்க சுலைமான் விலகிச் செல்வது போலவே தோன்றியது.
இன்னும் வேகமாகக் கைகளை வீசஆரம்பித்தான். மனம் ரபீஸா பேகத்தை நினைத்துக் கொண்டது. ஒன்பது வருடங்களாகியும் குழந்தையில்லை.
கொழந்த பொறந்ததும் நீதான்னே மாமன் மொறை செய்யனும்... இல்லேனா புள்ளைய உன் வாசப்படில் போட்டுட்டு வந்துருவேன். நீயாச்சு உன் மருமகப் புள்ளையாச்சு....
ஒவ்வொரு வருஷமும் சொல்லிக் கொண்டே தான் இருக்கிறாள்.
"ஜில்லாவே மூக்குல வெரல வைக்கிற அளவுக்கு என் மருமகளுக்கு விழா எடுத்துற மாட்டனா...''
நானும் பெருமை பீத்திக் கொண்டு தான் இருக்கிறேன்.
சுலைமானை நெருங்கி வந்து விட்டான். சுலைமான் குப்புறக் கவிழ்ந்து கிடந்தான். தலையில் பலமாக அடிபட்டிருந்தது.
“சொலை....''
சுலைமானைப் புரட்டி மார்போடு அணைத்துக் கொண்டு கன்னத்தைத் தட்டிப்பார்த்தான். எந்தவித அசைவுமில்லை .
வாயோடு வாய் வைத்து ஊதினான். இன்னும் பீடிப் புகையின் மணம் கமழ்ந்து கொண்டிருந்தது.
பயம் தொற்றிக் கொள்ள, அழுகை முட்டிக் கொண்டு வந்தது.
கோபத்துடன் சுலைமானைத் தள்ளிவிட்டு வானத்தைப் பார்த்தபடி மிதந்து கொண்டு கதறி அழுதான்.
அவன் கண்ணீரைச் சுவைத்து விழுங்கிக் கொண்டிருந்தது கடல். இன்னும் ஓயாத காற்று அவன் ஒலத்தைக் கேட்டு நடனமாடிக் கொண்டிருந்தது . அவன் பார்வையின் கூர்மையைப் பொறுத்துக் கொள்ள முடியாத வானம் இருள் போர்வைக்குள் தன்னை ஒளித்துக் கொண்டது.
தொலைவில் படகு ஏறக்குறைய மூழ்கியிருந்தது. வேகமாய் கையை எட்டி வீசினான். வீசும் போதெல்லாம் வலது கையில் இருந்து சிவப்புத் திற்றலாய் இரத்தம் தெறித்தது.
எதைப் பற்றியும் யோசிக்கக் கூட மனம் ஒப்பவில்லை. படகை நோக்கி வேகவேகமாய் கைகளை வீசிக் கொண்டிருந்தான்.
யுகம் யுகமாய் கடலோடு போராடிக் கொண்டிருக்கும் கடலோடிகளின் ஒட்டுமொத்த மூச்சாய் ஆசீர்வாதத்தின் மூச்சுக்காற்று பேரிரைச்சலாய் ஒலித்துக் கொண்டிருந்தது.
படகை நெருங்க இன்னும் பாதித் தூரம் இருந்ததுஉடல் கொஞ்சம் சொஞ்சமாய் சோர்வாகிக் கொண்டே வந்தது . ரோஸி அவ்வப்போது நினைவுக்குள் வந்து போனாள். கையில் இன்னும் ரத்தம் கசிந்து கொண்டுதானிருந்தது.
சுலைமான் கனத்துக் கிடந்தான். அவ்வப்போது நழுவ முயற்சிக்கும் அவனை மீண்டும் முதுகோடு தூக்கிக் கொண்டு நீந்துவது கொஞ்சம் சிரமமாக இருந்தது.
கண்களை இருட்டிக் கொண்டு வந்தது. வேறு வழியில்லை ஆசீர்வாதம் ஒரு முடிவுக்கு வந்தான். சுலைமானைக் கட்டியிருந்த கட்டை அவிழ்த்து விட்டான். இதைத்தான் எதிர்பார்த்ததைப் போல சுலைமான் மெல்ல விலகிக் கொண்டான். அவன் உதடுகளில் புன்னகை மாறாமல் இருந்தது.
வெடித்துக் கொண்டு வந்த அழுகையை அடக்கிக் கொண்டு படகை நோக்கி நீந்த ஆரம்பித்தான். சுலைமானைத் திரும்பிப் பார்க்கவில்லை.
வளர்மதி திட்டுவதைக் கேட்டு, ரோஸி சிரித்துக் கொண்டே இருந்தான்.
ஆசீர்வாதம் வேக வேகமாய்க் கைகளை வீசினான். படகு அருகில் இருப்பதாகத் தான் தோன்றியது. சுலைமானின் பனியனை வலது கை மணிக்கட்டில் கட்டிக் கொண்டான். சிறிது நேர ஓய்வுக்குப் பின் மீண்டும் நீந்த ஆரம்பித்தான்.
படகை நெருங்கி விட்டான். முற்றிலுமாக மூழ்காமல் ஒரு நுனிப்பகுதி மட்டும் நீட்டிக் கொண்டிருந்தது. வலை அந்த நுனிப் பகுதியைச் சுற்றிச் சிக்கிக் கிடந்தது.
படகைப் பிடித்துக் கொண்டு கொஞ்சம் ஆசுவாசம் செய்து கொள்ள முயற்சித்தான். கண்ணைச் சொருகிக் கொண்டு வந்தது.
காற்றின் சப்தம் உட்பட எந்தச் சத்தமும் கேட்கவில்லை. நிசப்தம் சூழ்ந்திருந்தது. பார்வை மங்கிக் கொண்டு வந்தது. இதற்கு மேலும் நீந்த முடியும் என்று தோன்றவில்லை .
“ரோஸி”
உள்ளுக்குள் எதையெதையோ முனகிக் கொண்டே இருந்தான். உடல் சோர்வடைய ஆரம்பித்திருந்தது. மூச்சின் வேகம் அதிகரிக்க, இதயத்துடிப்பு படபடத்துக் கொண்டிருந்தது.
படகின் மேல் சிக்கியிருந்த வலையில் பெரிய நண்டு ஒன்று சிக்கிக் கொண்டிருந்தது. வலையின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருந்தது.
அதைப் பார்த்ததும் ஆசீர்வாதத்திற்குச் சிரிப்பு வந்து விட்டது. சிரித்தபடியே அதை விடுவித்தான். அது அவனின் பெருவிரலைக் கவ்விப் பிடித்துக் கொண்டது.
“ரோஸி"
இடது கை விரலில் கிடந்த மோதிரத்தைக் கவ்விப்பிடித்துக் கடிக்க ஆரம்பித்தது அந்த நண்டு .
“ரோஸி...'
ஆசீர்வாதம் மோதிரத்தைக் கழற்றினான். கண்ணுக்கு நேரே வைத்து உள்ளுக்குள்ளேயே சிரித்தபடி ஏதோ முனகினான்.
சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, வலையை இழுத்து வலை நரம் பொன்றை வாயில் வைத்து கறும்பி எடுத்து மோதிரத்தைக் கோர்த்து நண்டின் கொடுக்கில் கட்டினான்.
நண்டை முகத்துக்கு நேரே தூக்கிப் பிடித்துக் கொண்டு, * 'வா... ரெண்டு பேரும் நீந்துவோம்... யாரு மொதல்ல கரையத் தொடுறாங்கன்னு பார்ப்போம்... நீ தொட்டுட்டா, அங்க எனக்காக ரோஸி காத்துக்கிட்டிருக்கா, அவள்ட்ட இந்த மோதரத்தக் குடுத்துரு... நான் தொட்டுட்டா... என் மகள நான் பாத்துப்பேன்... இத நீயே வச்சுக்க, உனக்குப் புடிச்ச யாருக்காச்சும் கொடு...''
நண்டு அவன் கை விரலைக் கடிப்பதை நிறுத்திவிட்டது. ஆசீர்வாதம் அதைத் தண்ணீரில் விட்டான். அது மேற்பரப்பில் மிதந்து அவனைப் பார்த்தபடியே மூழ்க ஆரம்பித்தது.
''அதோ தெரியுது பார் கரை''
ஆசீர்வாதமும் வேகமாய்க் கைளை வீச ஆரம்பித்தான்.
“ரோஸி... ரோஸி...''
- சகி. சக்கரவர்த்தி (+91 96771 95543)
sahi.sakkaravarthi@gmail.com