பேச்சியின் மீன்குட்டி


'அய்... குட்டி மீனு...


எந்திரப் படகுக்குள் வலையை உதறிக் கொண்டிருந்தார் கடவுள். ஏற முடியாமல் தத்திப் பிடித்துப் படகுக்குள் ஏறி, ஊர்ந்து கொண்டிருக்கும் விலாங்கு க்குட்டியை கையிலெடுக்க முற்சித்தாள் பேச்சி.


அது நழுவிக்கொண்டு விழுந்தது. பெரும் முயற்சிச் செய்து இரண்டு கைகளாலும் அள்ளிக் கொண்டு அப்பாவை பார்த்தாள்.


கடவுள் வலையை உதறுவதை நிறுத்திவிட்டு பேச்சியை தூக்கி கீழே இறக்கிவிட்டார்.


உள்ளங்கைக்குள் சுருண்டு விரல் இடுக்குகளில் முண்டிக்கொண்டு நழுவ முயற்சி செய்து கொண்டிருந்தது விலாங்குக்குட்டி.


அதைப் பார்த்துக் கொண்டே வீட்டை நோக்கி மெதுவாக ஓடினாள் பேச்சி.


வீட்டுக்குள் நுழைந்தவள் சுற்றும் முற்றும் பார்த்தாள்.


வெய்யில் சூட்டை தணிக்க நீரூற்றி வைத்திருந்த மண் பானைக் கலையத்திற் குள் விலாங்குக்குட்டியைப் போட்டாள்.


அது வட்டமாகச் சுற்றிச் சுற்றி 'நீந்தியது. அதையே பார்த்தபடி பேச்சியும் மண்பானையை சுற்றிக்கொண்டே இருந்தாள்.


மீனை சுற்றிக்கொண்டே நேரம் போனது தெரியவில்லை .


''ஏய்... இன்னும் பள்ளிக்கூடத்துக்கு கௌம்பலயா?”


அம்மாவின் குரல் கேட்டதும் குட்டி மீனை பிரிய மனமில்லாமல் வெளியே ஓடிவந்து வாய் உடைந்த பிளாஸ்டிக்குடத்தில் தண்ணீர் அள்ளி முகத்தைக் கழுவினாள்.


'நயினார் அண்ணனுக்கு மட்டும் தண்டல் கட்டு... வள்ளி அக்கா கிட்ட நான் பேசிக்கிறேன்... கையில காச பாத்ததும் கண்ணு மண்ணு தெரியாம ஆடாத..." 


''நான் என்னடி கண்ணு மண்ணு தெரியாம ஆடுறே... சும்மா என்னயவே கொற சொல்லு..."


''ஆம... நேத்து குடிச்சுட்டு கவட்ட பொளந்துக்கிட்டு கெடந்தது எங்களுக்கு தெரியாதாக்கும்... உனக்குலாம் எவந்தான் கடவுள்னு பேர் வச்சானோ... கருமம்'


பேசிக்கொண்டிருந்த அப்பா அம்மாவுக்கு இடையே பரபரவென்று ஓடி பள்ளிச் சீருடையை போட்டுக் கொண்டாள் பேச்சி.


"ம்மா... கஞ்சி”


'வேளாங்கன்னி எந்திரிச்சு பழைய கஞ்சியும் சுண்ட வச்ச மீன் குழம்பையும் எடுத்து வைத்தாள். ''ப்பா... குட்டி மீனு என்னப்பா சாப்புடும்..."


''அதுவா... அது கடல்ல கெடக்குற சின்ன சின்ன மீனுங்கள சாப்புடும்..."


"ம்”


அரைகுறையாய் சாப்பிட்டுவிட்டு வேகவேகமாக நரம்புப் பையைத் தூக்கிக்கொண்டு ஓடினாள்.


பள்ளியில் ஒரே குட்டி மீன் புராணம் தான்.


"குட்டி மீன் எப்படி இருந்தது தெரியுமா? வழுவழுனு இருந்திச்சி... பாம்பு மாறி நெளிஞ்சி நெளிஞ்சி... ப்பா... கைல வச்சிருந்தப்ப முண்டிக்கிட்டே இருந்துச்சி தெரியுமா... இன்னும் கை கூசுது...'


குட்டி மீன் பற்றி பேசிப் பேசியே பேச்சிக்கு பொழுது கழிந்தது.


ஜெனிபர் டீச்சர்கிட்ட திட்டு வாங்கினாள்.


லீடர் பிரசன்னாவிடம் 'ரொம்ப ரொம்ப சுட்டி' பட்டம் வாங்கினாள்.


ஆனால் அவளுக்கு எதைப் பற்றியும் கவலையில்லை . அவளின் மனசு முழுக்க குட்டி மீனைச் சுற்றிக்கொண்டே இருந்தது.


சாயங்காலம் 4.10க்கு மணி அடித்ததும் பையை தூக்கிக்கொண்டு ஒரே ஓட்டம்.


வீட்டில் வந்துதான் நின்றாள்.


பையை தூக்கி மூலையில்போட்டுவிட்டு மண்பானையை பார்த்தாள். அது காலியாக இருந்தது. அதிர்ச்சியாகிப்போனாள்.


எல்லா குடங்களையும் உருட்டி துழாவிப் பார்த்துவிட்டாள். எதிலும் குட்டி மீனை காணவில்லை.


பாத்திரங்களை உருட்டும் சத்தம்கேட்டு படுத்துக்கிடந்த கடவுள் எழுந்துவிட்டார்.


"என்னமா தேடுற...”


"ப்பா... குட்டி மீன் எங்கப்பா...”


கடவுள் கொட்டாவி விட்டுக்கொண்டே,


''அது செத்துப்போச்சுடா... பூனைக்கு எடுத்துப்போட்டுட்டேன்..."


"ப்பா ..."


வீறிட்டுக்கொண்டு அழ ஆரம் பித்தாள் . பதறிப்போய் கடவுள் எழுந்து சமாதானப்படுத்த முயன்றார். பேச்சி சமாதானமாகவில்லை . அழுதுகொண்டே இருந்தாள்.


மண்பானையைப் பிடித்துக் கொண்டே அழுதபடி தூங்கியும் போனாள். எவ்வளவு நேரம் தூங்கினாள் என்று தெரியவில்லை .


பேச்சிமா... சாப்டுட்டு தூங்குடா..."


அம்மாவின் குரல் கேட்டு எழுந்து உட்கார்ந்தாள். சுடுசோறும் 'சூடான மீன் குழம்பும் ஆவி பறந்து கொண்டிருந்தது.


பேச்சி மீன் குழம்பையே பார்த்துக் கொண்டிருந்தாள். அழுகை முட்டிக்கொண்டு வந்தது.


''ஒன்னும் வேணா போ...” என்று மீன் குழம்பை உதைத்து தள்ளிவிட்டு எழுந்து கடலை நோக்கி ஓடினாள்.


கடவுள் பின்னாடியே சமாதானம் சொல்லிக்கொண்டே ஓடினார்.


' பேச்சி எங்கும் நிற்காமல் ஓடி 'கடல் முன் தான் போய் நின்றாள்.


கடலைப் பார்த்தபடி முணகிக் கொண்டிருந்தாள். கடவுள் சொன்ன சமாதானங்கள் எதுவும் அவளின் காதுகளில் விழவேயில்லை .


'பரந்து விரிந்து கிடக்கும் கடலில் நீந்திக் கிடந்த குட்டி மீனுக்கு சிறு மண்பானை போதாதென்று பேச்சிக்குப் புரியவில்லை .


கடலை விட பரந்து விரிந்து விசாலமானது பேச்சியின் மனசு என்று அந்த குட்டி மீனுக்கும் புரியவில்லை .


கடல் அலைக் கரங்களை நீட்டி நீட்டி பேச்சியின் கால்களில் தழுவி மன்னிப்புக் கேட்டுக்கொண்டே இருந்தது.


- சிறுகதை


சகி