என்ன படிக்கலாம்... எங்கு படிக்கலாம்... ?
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் (TNJFU)
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகி விட்டன. பள்ளிப்படிப்பை வெற்றி கரமாக நிறைவு செய்துவிட்ட மாணவர்களுக்கு மேற்படிப்பில் எந்தத் துறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் நிறையக் குழப்பங்கள் இருக்கலாம்.
நிறையப் பேருக்கு மருத்துவ ராவதே கனவாக இருக்கும். அதைத் தவிர்த்துப் பார்த்தால் பொறியியல் படிப்புகள் மீது தான் கவனம் கவிழ்கிறது.
பொறியியல் பட்டதாரிகள் வேலையில் வடாத் திண்டாட்டத்தில் சிக்கித் தவித்துக் கொண்டிருப்பது கண்கூடாகத் தெரிந்தாலும் புதுப்புதுப் பொறியியல் கல்லூரிகள் முளைத்துக் கொண்டே இருக்கின்றன. மாணவர்களும் லட்சங்களில் பணம் செலவழித்து அதில் சேர்ந்து கொண்டேதான் இருக்கின்றனர்.
மாற்றுத் துறைகள் எவ்வளவோ இருந்தும் அவையெல்லாம் கவனம் பெறாமலேயே கிடக்கின்றன.
மீனவ சமூக மக்களுக்குக் கடல் சார்ந்து இயங்குவது என்பது மிகவும் இயல்பான விஷயம்தான். ஆனாலும், கடல் சார் கல்வித்துறைகளை அவர்கள் தேர்ந்தெடுக்கிறார்களா என்றால், இல்லை என்றே பதில் கிடைக்கிறது.
போட்டித் தேர்வுகளுக்காகவும், மீன் வளத்துறை சார்ந்த அரசுப் பணிகளுக்காகவும் வேற்று சமூகத்தினர் கடல் சார் கல்வித்துறைகளைத் தேர்ந்தெடுத்து வெற்றி பெற்று வருகின்றனர்.
நம் சமூகத்துக்குக் கடல் சார்ந்த கல்வியியல் துறைகளை அறிமுகம் செய்ய வேண்டியது 'நமது மீனவனின்' கடமையாகக் கருதுகிறோம்.
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் (TNJFU)
தமிழ்நாடு மீன்வளப் பல்லைக்கழகம் 2012 ஆம் ஆண்டு நாகப்பட்டினத்தில் நிறுவப்பட்டது. இப்பல்கலைக்கழகமானது தமிழ்நாடு அரசு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வருகிறது.
தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில், மீன் வளர்ப்பு, மீன் வள உயிரியல், மீன் பிடித்தல், மீன் உயிர்த் தொழில் நுட்பம், மீன் வளப் பொருளாதாரம், மீன்கள் வாழும் சூழ்நிலையியல், மீன்வள விரிவாக்கம், மீன்வளத் தொழில் நுட்பம், மீன்வளப் பொறியியல் மற்றும் மீன்கள் பதப்படுத்துதல் குறித்தான கல்விப் பிரிவுகள் உள்ளன.
ஆண்டுதோறும் இப்பல்கலைக்கழகத்தில் பொது நுழைவுத் தேர்வு மூலம் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள்.
இளநிலை பட்டப்படிப்பு
நான்காண்டு படிப்பாக, இளநிலை மீன்வள அறிவியல் (B.F.Sc ) என்ற கல்விப் பிரிவு இப்பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கப்படுகிறது.
பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் அறிவியல் மற்றும் கணிதப் பாடப் பிரிவுகளைத் தேர்ந்தெடுத்த மாணவர்கள் அனைவரும் இப்படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
முதுநிலை பட்டப்படிப்புகள்
தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் பத்து பாடப் பிரிவுகளில் முதுநிலை மீன்வள அறிவியல் (M.F.Sc) மேற்படிப்புகள் உள்ளன.
1. மீன் வளர்ப்பு (Aquaculture)
2. மீன் வள உயிரியல் மற்றும் வள மேலாண்மை (Fisheries Biology and Resource Management)
3. மீன் வள விரிவாக்கம் (Fisheries Extension)
4. மீன் செயலாக்கத் தொழில் நுட்பம் (Fish Processing Technology)
5. மீன் பிடித் தொழில் நுட்பம் மற்றும் மீன் வளப் பொறியியல் (Fishing Technology and Fisheries Engineering)
6. மீன் வள உயிரித் தொழில் ட்பம் (Fisheries Biotechnology)
7. மீன் நோயியல் மற்றும் சுகாதார மேலாண்மை (Fish Pathology and Health Management)
8. மீன் வளச் சூழல் மேலாண்மை (Fisheries Environment Management)
9. மீன் தர உத்தரவாதம் மற்றும் மேலாண்மை (Fish Quality Assurance and Management)
10.மீன் வளப் பொருளாதாரம் (Fisheries Economics)
முனைவர் பட்ட பாடப் பிரிவுகள்
தமிழ்நாடு மீன் வளப் பல்கலைக்கழகத்தில் ஏழு பாடப் பிரிவுகளில் முனைவர் பட்ட (Ph.D) ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
1. மீன் வளர்ப்பு (Aquaculture)
2. மீன் வள உயிரியல் மற்றும் வள மேலாண்மை (Fisheries Biology and Resource Management)
3. மீன் வளப் பொருளாதாரம் (Fisheries Economics)
4. மீன் செயலாக்கத் தொழில் நுட்பம் (Fish Processing Technology)
5. நீர்வாழ் சூழலியல் மேலாண்மை (Aquatic Environment Management)
6. மீன் தர உத்தரவாதம் மற்றும் மேலாண்மை (Fish Quality Assurance and Management)
7. மீன் வள விரிவாக்கம் (Fisheries Extension)
பிற மீன் வளக் கல்லூரிகள்
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் மீன்வளக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக் கழகமும், அதன் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பிற மீன்வளக் கல்லூரிகளும் தமிழகத்தில் வாழும் மீனவர் சமூகத்தின் நலனைக் கருத்தில் கொண்டும், மீனவர்களின் மேம்பாட்டுக்காகவும் ஏற்படுத்தப்படுகிறது என்று அவை தொடங்கப்பட்ட போது சொல்லப்பட்டது.
ஆனால், எந்த மீன்வளக் கல்வி நிறுவனமும் மீனவர்களின் நலனுக்கு எதுவும் செய்ததாகத் தெரியவில்லை.
கல்விப் பிரிவுகளில் பொருளாதார ரீதியில் ஏற்கனவே வலிமை பெற்றவர்களே பயின்று வருகின்றனர்.
பொது நுழைவுத் தேர்வு வைக்கப்படுவதால், சராசரி கிராம மீனவ மாணவன் பங்கு பெறவோ, வெற்றி பெறவோ முடியவில்லை . அதுமட்டுமின்றி இக்கல்வி நிறுவனங்கள் மீனவர்களின் நலன் சார்ந்தவை என்பதைப் பற்றியான விழிப்புணர்வைக் கூட தமிழக அரசோ, கல்வி நிறுவனங்களோ ஹெபடுத்தி முனையவில்லை.
மீன்வளக் கல்வி நிறுவனங்களில் மீனவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். அப்போது தான் கடல் சார் கல்விப் பிரிவுகளில் மீனவர்களின் பங்களிப்பை உறுதி செய்ய முடியும்.
அரசு ஆவன செய்யுமா?