பித்துக்குளியின் கடிதங்கள்
''யார்ரா இந்த பித்துக்குளி பய...?"
மாமல்லபுரம் கடற்கரைக்கு வரும் எல்லோரும் என்னைப் பார்த்துக் கேட்கும் ஒரே கேள்வி இதுதான்?
இதற்கு எவரும் பதில் சொல்லியதில்லை. எனக்கும் பதில் தெரியவில்லை.
ஆம்! எனக்கு என்ன பெயர் வைப்பதென்று தெரியவில்லை அதனால் நீங்கள் வைத்த பெயரையே ஏற்றுக்கொள்கிறேன்.
நான் பித்துக்குளி.
நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன் என்பதைத் தவிர என்னிடம் எந்த அடையாளங்களும் இல்லை.
நீங்கள் எனக்கு உதவமுடியும்ஆனால் எக்காரணம் கொண்டும் என்னை யாசகனாக மாற்ற முடியாது.
உங்களின் துண்டுப்பீடி, பாதி புகைத்த சிகரெட் போன்றவற்றை எனக்கு உணவாக மனமுவந்து தரலாம். இதை நீங்கள் யாசகம் என்று பீற்றிக் கொண்டால் நீங்கள்தான் பிச்சைக்காரனாகிப் போவீர்கள்.
நிறையப் பேருக்கு என் தோள் பையில் ஒரு கண் இருக்கத்தான் செய்கிறது.
விலையுயர்ந்த போதைப் பொருள் இருப்பதாகத் தகவல் கிடைத்து மத்தியப் புலனாய்வு காவல்படை வந்து ஒரு முறை ஏமாந்து போனது.
நான் விலையுயர்ந்த நிறைய நினைவுகளைத்தான் இந்த தோள் பையில் சுமந்து கொண்டு இருக்கிறேன்.
இந்தகடற்கரைநெடுக இன்னும் கரையாமல் ஏதோ ஒன்றாக சுற்றிக் கொண்டிருக்கும் காதலைச் சுமந்து கொண்டிருக்கிறேன்.
மணல் தரையில் அமர்ந்து மடிக்குள் முகம் புதைத்து அழுது சிந்திய கண்ணீரைச் சுமந்து கொண்டிருக்கிறேன்.
தோல்விகள் விரட்ட ஓட முடியாமல் இங்கு வந்து ஒய்ந்து போன கனவுகளைச் சுமந்துக் கொண்டிருக்கிறேன்.
கடல் பேரலைக்குள் காணாமல் போன எண்ணற்ற உறவுகளின் வலியைச் சுமந்து கொண்டிருக்கிறேன்.
கடிதங்கள் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து ஆடையின்றி கரையொதுங்கிய உடல்களின் அம்மணங்களைச் சுமந்து கொண்டிருக்கிறேன்.
இப்படி என் தோள் பைக்குள் நிறையக் கடிதங்கள் இருக்கின்றன.
யாரோ யாருக்கோ எழுதிய கடிதங்களைச் சுமந்து கொண்டு திரிகிற என்னைப் பித்துக்குளி என்று சொல்லாமல் வேறெப்படிச் சொல்வார்கள்?
நான் சுமந்து திரிகிற கடிதங்கள் உங்களுக்கு வெறும் காகிதங்களாகத் தெரியலாம்.
உச்சி முகர்ந்து முத்தமிட்டுக் கொள்ளலாம்.
கொஞ்சம் அழலாம் ; இல்லையென்றால் சிரிக்கலாம்.
கொஞ்சம் வலிக்கலாம் ; இல்லையென்றால் வருடலாம்.
பொய்யெனப் புறம் தள்ளலாம்.
நீங்கள் எழுதப்போகும் அடுத்த கதைக்குக் கரு கிடைக்கலாம்.
காதலியையோ , மனைவியையோ சமாதானப்படுத்த ஒரு நல்ல வசனம் கிடைக்கலாம்.
கடல் நீரைப் போல உப்புக் கரிக்கலாம்.
பார்வை பட்டதும் உள்ளுக்குள் இனிக்கலாம்.
தொலைந்து போன உறவு களைத் தேடிப் போகத் தூண்டலாம்.
இழந்து விட்ட நட் பொன்றை நினைத்து அழத் தோன்றலாம்.
கிழடு தட்டி விட்டது எனக்கு.
இறக்கும் முன் இந்த சுமைகளை இறக்கி வைக்க முயற்சிக்கிறேன்.
தாங்குவோர் தாங்கிக் கொள்ளுங்கள்.
வேண்டாதோர் விலகிக் கடந்து செல்லுங்கள். நன்றி.
இப்படிக்கு,
பித்துக்குளி