முத்தத்தின் சுவை உவர்ப்பு
உச்சி வெயிலில் கால்களைப் பரப்பி அமர்ந்து கொண்டு கடிதங்களைக் கிளறிக் கொண்டிருந் தான் பித்துக்குளி.
நீண்ட தேடலுக்குப் பின் கண்டடைந்து விட்ட ஒரு புதையலைப்போல் ஒரு கடிதத்தை எடுத்ததும் புன்னகைத்துக் கொண்டான்.
சுழன்றடிக்கும் கடல் காற்றில் அக்கடி தம் தன்னைத் தானே அவிழ்த்துக் கொண்டது.
விழியே...,
பொழுது சாய்ந்தும் சாயாத அந்த அந்தியில், ஒளிந்து வந்து, பயம் காட்டிப் பின் கட்டியணைத்து முத்தமிட்டாய் முதல் நாள்.
வெட்கப்பட்டுக் கொண்டது நீலக்கடல்.
நீளமான முத்தத்திற்குப் பிறகு உதடு சுவைக்கையில் கொஞ்சம் உப்புக் கரித்தது.
அதன் பிறகான காலங்களில் முத்தங்களின் எண்ணிக்கைக்குக் குறைவில்லை . ஆனால் அந்த முத்தத்தின் உப்புச் சுவை இன்னும் நெஞ்சுக் கூட்டுக்குள் இனித்துக் கொண்டே இருக்கிறது.
உப்பங்காத்து பிசுபிசுப் பில் ஊறிப்போய் இருந்த கட்டுமரத்தில் சாய்ந்தபடி காதல் மொழி பேசியிருக்கிறாய்...
அவ்வப்போது கண்கலங்கியிருக்கிறாய்...
பகமென நீளும் மௌனத்தைத் தந்திருக்கிறாய்...
அலைகளுக்குச் சரிநிகராய் கதை பேசியிருக்கிறாய்...
கடந்து போகும் கண் களுக்கு மிரட்டலாகக் கட்டளை யிட்டிருக்கிறாய்...
ஜோதிடக் கிழவியின்கை பிடித்து நீ ஆரூடம் சொல்லியிருக்கிறாய்...
பூ விற்க வந்த சிறுமியைப் பிடித்து வைத்து மணல் வீடு கட்டி விளையாண்டிருக்கிறாய்...
குமட்ட லெடுத்துக் குப்புறக் கிடந்த குடிகாரத் தாத்தாவுக்குக் குடிதண்ணீ ர் ஊட்டியிருக்கிறாய்....
தாழப் பறக்கும் விமானத் திற்கு கையசைத்துக் கரைகாட்டி யிருக்கிறாய்....
என்னைக் காத்திருக்கச் சொல்லி விட்டுப் புல்லாங்குழல் விற்பவனின் பின்னே இசை கேட்டுத் திரும்பி வந்திருக்கிறாய்...
கைக் குழந்தையின் கைதவறிப் பறந்தபலூன்பிடித்துக் கொடுத்திருக் கிறாய்...
கால் கொலுசுகளைக் கழற்றித் தந்துவிட்டுக் கடல் அலைகளைப் பூட்டிக்கொண்டு ஆடியிருக்கிறாய்...
இப்படி என்னென்னவோ செய்திருக்கிறாய்.
ஆனாலும் என் மனமெல்லாம் நனைத்துக் கிடப்பது ஊடல் பொழுதுகளில் திரும்பி அமர்ந்து கொள்ளும் எனக்கு எதிர்பாராமல் பின்னங்கழுத்தில் நீதந்த முத்தங்கள் தான்.
புயலைச் சொல்லி ஊரடங்கிப் போயிருந்த ஓரிரவில் என் வீட்டுப் பின் வாசல் வழியாக உள் நுழைந்து இழுத்துப்போனாய் என்னைக் கடற்கரைக்கு.
நினைவிருக்கிறதா?
புயலெனச் சொன்னேன்.
'என் உள்ளுக்குள் அடித்துக் கொண்டிருக் கும் உன் ஞாப கப் புயலைத் தாண்டி இந்தப் புயல் என்னை என்ன செய்துவிடப் போகிறது' என்றாய்.
அந்த இரவு இன்னும் விடியாமல் நீண்டு கொண்டுதான் இருக்கிறது.
என்னைப் பார்க்க வந்ததற்காய் உள்ளங்கால் இரண்டிலும் சூடு கண்டாய். மருந்தோடு மயிலிறகு கொண்டு வந்து போட்டுவிடச் சொன்னாய்.
என் மடியில் கால் நீட்டிக் கொண்டுமணலில் சாய்ந்து சுகங்கண் டாய். காயத்தில் மருந்தோடு என் கண்ணீரையும் தான் தடவினேன்.
இனி நாம் சந்திக்கப் போவதில்லை .
நம்மைத் தொட நினைத்துத் தோற்றுப் போன கடல் இன்று என்னைக் கண்டு எள்ளி நகையாடு வதைப்போல் தோன்றுகிறது.
நம் காதலுக்கு இடம் கொடுத்த கட்டுமரத்திற்குச் சொல்லிவிடு.
நம் பொழுதுகளை அலங்கரித்த கல் இருக்கைக்குச் சொல்லி விடு.
நான் திரும்பப் போவதில்லை. தரையில் நீயும் நானும் வேறெனச் சொன்னவன் எவனெனத் தெரியாது . கடலில் நாமெல்லாம் கடலோடிதான் என்பது நான் சொன்னால் யாருக்கும் புரியாது.
இப்படிக்கு,
-இமை