ஆண்டி - அழகி

- சிறுகதை



இந்த ஆண்டிப் பய இப்டி பொசுக்குனு போய்ச் சேந்துட்டானய்யா... இன்னு, ஆத்தரம் அவசரத்துக்கு எவனப் போயித் தேடுறது...''


செண்பகராமன் தாத்தா கொஞ்சம் கம்மிய குரலில் சொன்னார். இருளாண்டித் தாத்தாவும் அவர் சொல்வதை ஆமோதிப்பது போல் சோகமாகத் தலையாட்டிக் கொண்டிருந்தார்.


- கொட்டு மேளச் சத்தம் கிழக்கால கொஞ்சம் தொலைவில் கேட்டுக் கொண்டிருந்தது. கருக்கலாகக் கவிந்து கொண்டிருந்த இருளை 'வீ'யெனக் கத்தியபடி வெடித்துச் சிதறும் வான வெடிகள் கிழித்துக் கொண்டிருந்தன.


மேற்கே சூரியன் மங்கிக் கொண்டிருக்கிறது. தொலைவில் கேட்ட சாவு மேளத்தின் சத்தமும், வான வேடிக்கைச் சத்தமும் கொஞ்சம் கொஞ்சமாய் நெருங்கிக் கொண்டிருக்கிறது.


வெறிச்சோடிக் கிடந்த தெருவில் ஒரு சில கிழவிகள் மட்டும் ஆண்டியின் வருகைக்காக அவரவர் வீட்டின் வாசலில் தண்ணீர்ச் சொம்புகளுடன் நின்று கொண்டிருக்கிறார்கள்.


தெரு முக்கில் ஓடு வய்ந்த பழைய பால்வாடிச் சுவரில் சாய்ந்து கொண்டு சித்திரங்குடிக் கால்வாய் ஈர மதப்பில் குளிர்ந்திருந்த பூவரச மர நிழலில் செண்பகராமன் தாத்தாவும் இருளாண்டித் தாத்தாவும் பழசை அசைபோட்டுக் கிடக்கிறார்கள். அருகிலேயே இருக்கும் செண்பகராமன் தாத்தாவின் கூரை வீட்டுக்குள் அவரின் பேரன் “உர்... உர்... பீப்பீ'' என செங்கல் காரோட்டிக் கொண்டிருக்கிறான்.


“எந்த வேலையா இருந்தாலும் கூப்ட கொரலுக்கு குடு குடுனு ஓடிவந்து மொகஞ்சுழிக்காம பாப்பானே பாவிப்பய...''


இருளாண்டித் தாத்தாவும் தழுதழுத்தார்.


*கீழத்தெரு பொடிசுக நாலெழுத்துப் படிச்சுட்டோம்னு கிசும்பையும், கிருத்துருவத்தையும் சூத்துக்குள்ளயே சுத்திக்கிட்டுத் திரியிதுக. அதுகள்ட்ட போயா நிக்கிறது...''


- ''அடப் போயா... ஆனானப்பட்ட ஆண்டிப் பயலே போய்ட்டான்... இதுகள்ட்டத்தான் போயி நிக்கப் போறமாக்கும்... அவனப் போல உண்டுமா...''


ராமன் தாத்தா தெருவையே வெறிச்சுப் பாக்க ஆரம்பிச்சார். இருளாண்டித் தாத்தாவும் எதுவும் பேசிக் கொள்ளாமல் அமைதியாகி விட்டார். மேளச் சத்தம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ரெண்டு பேரோட பார்வையும் இடது புறமாகத் திரும்பியது.


பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மூன்று முகத் தேரில் ஆண்டிச் சாமி வலம் வந்து கொண்டிருந்தார். மேளக்காரர்கள் முன்னேதுள்ளித்துள்ளி ஆடிச்சென்று கொண்டிருக்கிறார்கள். வெள்ளை வேட்டி பந்தலாக, ஆண்டியின் தம்பி முத்துக்கருப்பு நனைந்த வேட்டியுடன் நீர்மாலை எடுத்துப் போய்க் கொண்டிருந்தார். கிச்சா மக அப்பத்தா தள்ளாத வயசைப் பொருட்படுத்தாமல் தாங்கித் தாங்கி நடந்து போய்க் கொண்டிருந்தார். தம்பியப் பறிகொடுத்த சோகம் அவளை அப்பியிருந்தது.


தெருவோரக் கிழவிகள் கையிலிருந்த சொம்புத் தண்ணீரை தெருவில் ஊற்றி துட்டி கழித்தார்கள். தேர் மெல்ல அசைந்து அசைந்து தேர்ப்பாதை நோக்கி நகர்கிறது.


"ஒண்டிக் கட்டையாவே பொழப்ப ஓட்டிட்டானேயா... வாழ்ற வரைக்கும் ஒடம்பையும் உசுரயும் இந்தப் பொசப்பத்துப்போன சனங்களுக்கே செலவழிச்சுட்டு இப்பவும் ஒண்டியாத்தானேயா போறான்... சை... என்னடா இது மானங்கெட்ட மனுசப் பொழப்பு...''


இருளாண்டித் தாத்தா சலிப்புடன் வெடுக்கெனத் தலையைக் கவிழ்ந்து கொண்டார். மேளச் சத்தம் கேட்டு ஓடிவந்து தன் கால்மாட்டில் நின்று கொண்டு வேடிக்கை பார்க்கும் பேரனை தடவிக் கொடுத்துக் கொண்டே தேர் போவதையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் இராமன்.


தேர் கல்லுரல் முக்கைத் தாண்டி, தேர்ப்பாதையில் கொஞ்ச நேரம் நின்றது. தண்ணீர்க்குடம் உடைக்கும் சடங்குகள் அங்குதான் நடக்கும். பெண்களுக்கு அதற்கு மேல் அனுமதி இல்லை. பெண்களின் அழுகுரல் பலமாகக் கேட்கிறது. இருளாண்டியும், ராமன் தாத்தாவும் எதுவும் பேசிக் கொள்ளாமல் தேர்ப்பாதையையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தேர் சென்ற தெரு பூக்களால் நனைந்து கிடக்கிறது.


மீண்டும் தேர் சுடுகாட்டுப் பாதையில் நகர்கிறது. பெண்களின் அழுகை அலறலாகிறது. இருப்புத் தாங்காத இருளாண்டித் தாத்தாதுண்டை உதறிக் கொண்டு எந்திரிக்கிறார்.


“சரிடா ராமா... வயக்காட்ல மொளகாய்க்கு தண்ணி பாயிது. ஓரெட்டுப் போயி பாத்துட்டு வந்துர்றேன்....''


ராமனின் பதிலை எதிர்பார்க்காமல் என்னத்தையோ புலம்பியபடி வானத்தைப் பார்த்து, கைகளை அங்கிட்டும் இங்கிட்டும் வீசிக் கொண்டு தனக்குத்தானே பேசிக் கொண்டு வயக்காட்டுப் பக்கம் நடந்தார். ராமன் தாத்தா அவர் போவதைப் பொருட்படுத்தவேயில்லை.


தேர் சுடுகாட்டுப் பாதையில் மறைந்ததும் பேரனும் வீட்டுக்குள் ஓடிவிட்டான். கொஞ்ச நேரம் தேர் போன திசையையே பார்த்துக் கொண்டிருந்த ராமன் தாத்தா மெல்ல எழுந்து வீட்டுக்கு நடைபோட்டார்.


பேரன் கதவோரமாகக் காரோட்டிக் கொண்டிருந்தான். கூரை வீட்டுக்குள் நுழைந்து எதையோ தேடினார். கீழே அழகம்மா கெழவி தலைகவிழ்ந்து கால் நீட்டி உட்கார்ந்திருந்தாள். கூரை எரவாரத்துல எதையோ ராமன் தாத்தா தேடிக் கொண்டிருந்தார். அழகம்மா கெழவி அவரைக் கவனிப்பதாகத் தெரியவில்லை .


“தாயி... இங்ஙன வச்ச முள்ளுவாங்கிய பாத்தியாத்தா...'


அவர் கேட்டதைக் கூட காதில் வாங்கிக் கொள்ளாமல் தலையைக் கவுந்துக்கிட்டு அப்படியே உட்காந்துக்கிட்ருக்கு கெழவி. சொவருக்கு மேல, ஒலைக்குள்ளனு தேடியபடியே கெழவியைத் திரும்பிப் பார்த்தார் தாத்தா.


“ஏத்தா... ஒங்கிட்டத்தேன் கேக்குறேன்... என்னடா ஒங்கப்பத்தாளுக்கு காதவிஞ்சு போச்சா...''


அதற்கும் கெழவியிடமிருந்து பதில்லை. தேடுவதை நிறுத்திவிட்டு, அவளையே பார்த்துக் கொண்டு நிற்கிறான். பேரனும் காரோட்டுவதை 1. நிறுத்திவிட்டு அவர்களையே வேடிக்கை பார்க்கிறான். கெழவி அப்படியே அசையாமல் உக்காந்து கொண்டிருக்கிறாள்.


“என்னாச்சு தாயி...''


மெதுவாக அவளருகில் சென்று அமர்ந்து குத்துக்கால் போட்டு உக்கார்ந்தார். அப்போம் கெழவி ஏறிட்டுக் கூடப் பார்க்கவில்லை . கெழவியின் மொகவாயத் தூக்கி நிமிர்த்திப் பார்த்தவர் பதறிப் போனார்.


''என்னாச்சு தாயி... இப்ப எதுக்கு தாயி கண்ணீ ர் சிந்துற...''


தோலெல்லாம் சுருங்கிப் போன கன்னத்தில் வழிந்திருந்த கண்ணீரைத் துடைத்துவிட்டார். அவரின் கைகளை விலக்கிவிட்டு மீண்டும் தலையைக் குனிந்து கொண்டது கெழவி. தாத்தாவும் கொஞ்ச நேரம் அமைதியாகி விட்டார்.


''புரியுது தாயி... அறுவது வருஷமாச்சு தாயி... இத்தன வருஷமும் எங்கூட ஒழப்பிட்டு, இப்பப் போயி ஒங்கண்ணியத்த களங்கமாக்கிறாத தாயி ... புள்ளங்க பாத்தா தப்பா நெனப்பானுங்க... கண்ணத் தொடச்சுக்க தாயி...''


அதுக்கு மேல் அவரால் அங்க இருக்க முடியல. துண்ட தோளுல போட்டுக் கொண்டு வெளியே வந்தார். பூவரச மரத்துல சாயங்கால குருவிகள் கத்திக்கிட்டுக் கெடந்துச்சுக... கயித்துக் கட்டிலத் தாக்கி மரத்தோரம் போட்டு உட்கார்ந்தார். ஏதேதோ நெனப்புகள் அவரை அமுக்கின. தேர் போன தெருவையே வெறிச்சுப் பார்த்துக் கொண்டிருந்தார். போனவர்கள் ரெண்டு மூனு பேராய்த் திரும்பிக் கொண்டிருந்தார்கள்.


ரெண்டு மூனு தடவை கட்டிலை அழுத்தி அதன் வலுவைச் சரிபார்த்துவிட்டு தோளில் கிடந்ததுண்டை சும் மாடு சுருட்டி கட்டில் கால்மேல் வைத்துத் தலையைச் சாய்த்தார். பூவரச இலைகளோட லேசான சலசலப்பும் குருவிகளின் கூச்சலும் கேட்டுக்கிட்டே இருக்கு. கண்ணை மூடிச் கொண்டு பழைய நெனப்புகளோடயே மூழ்கிப் போனார்.


***


“அரிப்பெடுத்த நாயிக்கி அடுத்த சாதிக்காரன் கேக்குதா...'


அழகம்மாவை மங்களத்தாயி வௌக்குமாறு பிஞ்சு சிதறச் சிதற அடித்துக் கொண்டிருந்தார். அழகம்மா எதுவும் பேசாமல் தலை கவிழ்ந்து விசும்பியபடி நின்று கொண்டிருந்தாள். அவ்வப்போது முந்தானையை மட்டும் சரி செய்து கொண்டாள்.


''சம்சாரி வீட்டுச் சிறுக்கி சாணாங் கொல்லைல கெடக்கிற சாணியைத் திங்க அலையுது. பெத்ததுக வாறி அள்ளி ஊட்டிவிடுங்கன்னு நெனச்சிட்டியாடி... வீட்ல ஆம்பள சரியா இருந்தாத்தானே பொட்டப்புள்ள பயத்தோட வளரும். அதுவே ஊரு மேஞ்சுக்கிட்டுருந்தா...”


மங்களத்தாயி அடிப்பதை நிறுத்தி பிஞ்சு போன வௌக்கமாற விசிறித் தூக்கி எறிந்துவிட்டு, திண்ணையில் உட்கார்ந்திருந்த சண்முகத்தையே வெறித்துப் பார்த்தாள். சண்முகத்தின் முகத்தில் சலனமில்லை . அதற்குள் பக்கத்து வீடுகளில் இருந்து ரெண்டு மூனு சொந்தபந்தங்கள் வந்து கூடிவிட்டன.


''அழகம்மாவுக்கு வேறெதுவும் நெனப்பு ஓடவில்லை . இந்நேரம் ஆண்டிச்சாமிய என்ன செஞ்சிருப்பாய்ங்களோ பாவிப் பசங்க...'' மனசெல்லாம் ஆண்டியச் சுமந்துக்கிட்டு கல்லு மாதிரி நின்னுக்கிட்டு இருந்தா. பில்லு மாத்துக் குச்சி அடி விழுந்த எடத்துல ரத்தக் கோடா பொடைக்க ஆரம்பிச்சிருச்சு.


‘‘ந்தா... ஆம்பள இப்டியே அமுக்கிக்கிட்டு ஒக்காந்துக்கிட்ருந்தா என்ன அர்த்தம். இந்த சாதிகெட்ட நாய்க்கி என்னத்த சொல்லப் போற...''


மங்களத்தாயி சண்முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.


''ஆசையா வளத்த கன்னுக்குட்டி, பீயத் திங்க ஆசப்பட்ருச்சு... இன்னு என்னத்தச் சொல்றது... அதுக்கு புல்லப் போட்டா என்ன, புண்ணாக்க போட்டாத்தான் என்ன... செண்பகம் இந்த மாசத்துலயே ஒரு நல்ல நாளா பார்றா...''


அருகில் நின்னுக்கிட்ருந்த செண்பக ராமனிடம் சொன்னார் சண்முகம். செண்பகம் கொஞ்சம் தயக்கத்துடன்,


"அழகம்மாட்ட ஒரு வார்த்த...''


செண்பக ராமன் பேச ஆரம்பிப்பதற்குள் சண்முகம் அவனை முறைத்துப் பார்த்தார். ராமன் பேச்சை பாதியிலேயே நிறுத்திக் கொண்டான்.


அந்த மாசத்துல பெருசா நல்ல நாள் எதுவும் இல்லேன்னாளும் ஏதோ ஒரு நாளை அவசரம் அவசரமாக முடிவு பண்ணினாங்க. பந்தல்கால் நடப்பட்டது.


அழகம்மாவுக்கு ஆண்டியின் நெனப்பாகவே இருந்துச்சு. ஊர்க்காரங்க அடிச்சுக்கிடிச்சுப் போட்ருவாங்கனு பயந்து அவங்கக்கா ஆண்டிய வெளியூரு அனுப்பி வச்சுட்டாங்கன்னு சில பேரு பேசிக்கிட்டாங்க. சிலர் காட்டுக்குள்ள கலுங்குப் பக்கம் தான்மறைஞ்சு இருக்கான்னும் பேசிக் கிட்டாங்க. ஆனா ரெண்டு மூனு நாளா ஊர்க்குள்ள நடமாட்டத்தக் காணோம்.


அழகம்மா எதுக்கும் பதற்றப்படவில்லை . கல்யாணத்துக்கு தயாரானாள். இருந்தாலும் ஓடிக்கடிப் போயிருவாளோன்னு பயந்து சொந்தக்காரப் பொம்பளைங்க மாறி மாறிக் காவலிருந்தார்கள். கல்யாண நாளும் வந்து விட்டது. ஆண்டியப் பத்தி ஒரு தகவலும் இல்லை.


எந்தப் பிரச்னையுமில்லாம கல்யாணம் நல்லபடியா முடிஞ்சது. மங்களத்தாயி ரொம்பவே சந்தோஷப் பட்டாள். மகளை தன் தம்பி செண்பக ராமனுக்கே கட்டிக் கொடுத்து விட்டதில் ரெட்டைச் சந்தோஷம்.


எல்லாப் பிரச்னைகளையும் மறந்து சாதிசனங்கள் கறிவிருந்தில் களிப்பானார்கள். சரக்குக்கும், கறித்துண்டத்துக்கும் சின்னச் சின்ன சச்சரவுகள் வந்தன. மத்தபடி பெருசா ஒரு பிரச்னையுமில்லை.


சிருசுக ரெண்டையும் கூரை வீட்டுக்குள்ள விட்டு விட்டு, பெருசுகள்லாம் வீட்டு முத்தத்துலயே மொடக்கிருச்சுக . மங்களத்தாயிக்கி இப்பவும் கொஞ்சம் பயம் இருந்தது. ''திடீர்னு நட்ட நடு ராத்திரியில் ஓடிப் போயிட்டான்னா...'' அதனால் எதுக்கும் தொனைக்கி இருக்கட்டும்னு ரெண்டு மூனு தாட்டிக்கமான பொம்பளைங்கள இங்கயே படுக்கச் சொல்லியிருந்தா.


ஒற்றைத் திருகு விளக்கின் வெளிச்சத்தில் வீடே மந்தகாரமாக இருந்தது. அழகம்மா அரக்கு கலர்ச் சேலைல அழகா இருந்தா.


செண்பக ராமன் ஒரே வீட்டுக்குள்ள தான் இருந்தாலும் இப்படி நெருக்கமா அழகம்மாவ பார்த்ததும் கெடையாது. ரசிச்சதும் கெடையாது. பக்கத்துல போயி மெதுவா உக்காந்தான். அழகம்மாவின் தோளைத் தொட்டுத் திருப்பினான்.


“தாயி... பெருசுகளுக்கு வெவரம் பத்தாது தாயி... நானும் ஆண்டியத் தேடிப் பாத்தேன். எங்கயும் காங்கல... நீ போயிரு தாயி... கம்மாக்கரை வரைக்கும் கொண்டு போய் விடுறேன்... நீ போயி சந்தோஷமா இரு தாயி"


அழகம்மா எதும் பேசிக் கொள்ளாமல் அமைதியாகவே தலையைக் கவிழ்ந்து கொண்டிருந்தாள். விம்மலை அடக்கிக் கொண்டிருப்பது போல் தெரிந்தது.


“ என்ன தாயி யோசிக்கிற...''


அழகம்மாவின் நாடியைப் பிடித்துத் தூக்கி நேருக்கு நேராகப் பார்த்தான்.


''வேணாம் மாமா... அந்தப் பீய விட இந்த பில்லும் புண்ணாக்கும் அப்டி என்ன சொகத்தக் கொடுக்குதுன்னு வாழ்ந்து தான் பாத்துர்றனே மாமா...


அடக்கி வைத்திருந்த அழுகை வெடித்தது. செண்பகராமன் கண்ணீரைத் துடைத்துத் தேற்றினான். கொஞ்சம் அவள் ஆறுதலடைந்ததும் திருகு விளக்கின் திரியைக் கீழிறக்கி அணைத்தான். இருள்.


***


''ஆத்தாடி... அத்தெ எந்திரிக்க மாட்டிதே... என்னாச்சுனு தெரியலியே...''


சின்ன மருமகளின் அலறல் கேட்டு சட்டென கண்விழித்து எழுந்து துண்டை உதறிக் கொண்டு ஓடிவந்தார் செண்பகராமன். வீட்டுக்குள் நுழைந்து வாசப்படியிலேயே நின்று பார்த்தார். அழகம்மா கெழவியின் கண்கள் வாசலையே பார்த்தபடி நிலை குத்தியிருந்தது.


மருமகள் விசும்பிக் கொண்டே பின்வர, மெதுவாக நடந்து அழகம்மா அருகில் போனார்.


"தாயி...''


கெழவிக்கு பக்கத்தில் உக்காந்து கையத் தொட்டார். குளிர்ந்து போயிருந்தது . கன்னங்களைப் பிடித்து அசைத்துப் பார்த்தார். நிலைகுத்திய பார்வை மாறவேயில்லை. கண்ணிமைகளை தடவி மூடிவிட்டு எழுந்தார்.


‘‘போய்ட்டா ...'


' ' ஆத்தாடி . . நான் என்னத்தப் பண்ணுவேன். இப்டி ஒன்னும் சொல்லிக்காமக் கொள்ளாம கண்ண மூடிட்டயே... அத்தே ..."


பலங்கொண்ட மட்டும் மார்பில் அடித்துக் கொண்டு கெழவியை இழுத்து மடியில் போட்டுக் கொண்டு சின்ன மருமகள் பாக்கியம் அழுது அரற்றினாள். அம்மா அழுவதைப் பார்த்து அவள்மகனும் செங்கல் காரைக் கீழேபோட்டுவிட்டுச் சினுங்கினான்.


செண்பகராமன் தாத்தா விறுவிறுன்னு வெளியே போயி பூவரசமரத் தூரில் உக்காந்துக்கிட்டார். யாரிடமும் எதுவும் பேசிக்கல.


அழுகுரல் கேட்டு பக்கத்து கல்லு வீடுகள்ல இருந்த மகன்களும் மருமகப் பிள்ளைகளும் ஓடிவந்து அழுதாங்க. கொஞ்ச நேரத்துக்கெல்லாம் கூட்டம் கூடிப்போச்சு. ஒருத்தர் ஓடிவந்து பூவரச மரத்துக்குக் கீழ கெடந்த கட்டில் தூக்கிட்டுப் போனார். மகன்களின் அழுகுரல் பலமாகக் கேட்டது.


ஆளாளுக்கு வரிந்து கட்டிக் கொண்டு ஒவ்வொரு வேலையாகப் பார்க்க ஆரம்பித்தனர். அதற்குள் பட்டுச் சேலையொன்றில் சுத்தி அழகம்மா கெழவிய வெளிய தூக்கிக் கொண்டு வந்து கட்டிலில் கிடத்தினார்கள். வீடே கண்ணீரும் கம்பலையுமாக மாறிப்போனது.


அங்கொன்றும் இங்கொன்றுமாய் அவரவர் வீடுகளில் கிடந்த தென்னந்தட்டிகள் கொண்டு வரப்பட்டன. பந்தல் போடும் வேலை ஆரம்பமானது. போஸ் சித்தப்பா ரெண்டு மூனு டியூப் லைட்டுகளைக் கொண்டு வந்து போட்டார். சாவு வீடு பளிச்சென்றானது.


கெழவிகளும், பொம் பளைங்களும் கட்டிலைச் சுற்றி உக்காந்து ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட்டனர். எழவுச் சேதி கேள்விப்பட்டு கொமராண்டி வந்துட்டான். பெரிய வீட்டுச் சாவுன்னு சொல்லி அவன் தம்பி தொரையும் கூட வந்துருந்தான் . அவனுகள்ட்ட ஆக வேண்டிய காரியங்களப் பத்தி மூத்த மகன் சொல்லிக்கிட்ருந்தாரு.


உள்ளூர் மேளக்காரர்கள் வந்து விட்டார்கள். நாளைக்கு காலைல ஊத்தூரணி செட்டு வர்ற வரைக்கு உள்ளூர் மேளக்காரர்களே வாசிக்கட்டும்னு தீர்மானம் பண்ணிட்டாங்க. ஆண்டிக்கி அடிச்ச கையோட அவுகளுக்கு ரெண்டாவது வரும்படி. அதும் பெரிய வரும்படி.


ஒரு ஓரமப் போயி தீ மூட்டி கொட்டுகளைத் தயார் பண்ண ஆரம்பித்தார்கள். சில கிழடுகள் செண்பகராமன் பக்கத்தில் வந்து உக்காந்து தட்டி கேட்டனர்.


மொன்னையன்கைலிக்குள் சரக்குபாட்டில்களைச் சுமந்து கொண்டு கூட்டத்தையே சுத்திச் சுத்தி வந்தான். 'தொன்னூர்வா சரக்கு நூத்தம்பது''. அவனுக்கு செம வசூல்.


அவரவர்களும் தங்களுக்குத் தெரிஞ்ச சொந்தங்களுக்கு செல் போன்ல தகவல் சொல்லிக்கிட்டிருந்தாங்க. ரொம்பப் பக்கத்தூர்ல இருந்து சனங்க ராத்திரியினும் பாக்காம கேதங்கேக்க வந்துக்கிட்ருந்தாங்க.


செண்பகராமன் தாத்தா சட்டுனு எந்திரிச்சு விறுவிறுன்னு மொன்னையனைத் தேடிப் போனார். மொன்னையன் மேளக்காரர்களுக்கு ஊத்தி விட்டுக் கொண்டிருந்தான். அவனருகில் போய் நின்றார்.


''என்ன பெருசு நீயொன்னு போடுறியா...'' நூத்தம்பது ரூவா...”


வெடுக்கென கைலிக்குள் கை விட்டு ஒரு பாட்டிலை எடுத்துக் கழற்றி மடக் மடக்கென குடித்தார். மற்றவர்கள் யாரும் தடுக்கவில்லை .


“பொஞ்சாதி போன சோகம். அதான் குடிக்காத மனுசனையும் குடிக்கத் தூண்டிருக்கு''


பாட்டிலைத் தூக்கிப் போட்டு விட்டு செண்பகராமன் முழிச்சு முழிச்சுப் பார்த்தார். ஏதோ மதர்ப்பாக இருந்தது.


“நீபாட்டுக்க மடக் மடக்னு குடிக்கிற... இதென்ன கஞ்சித் தண்ணீனா நெனச்ச... கொடலவிஞ்சு கூடவே நீயும் போயிறுவ...''


மொன்னையனின் கிண்டலைப் பொருட்படுத்தாமல் தடுமாறியபடி நின்றார். பக்கத்திலிருந்த கொட்டுக்காரனை எத்தி “ அட்றா...'' என்றார்.


'டும்' ஒருவன் அடிக்க, இன்னொருவன் உர்.. உர்..னு உரும பீப்பிக்காரன் ஊத ஆரம் பித்து விட்டான். சுதி ஏற ஏற செண்பக ராமனின் கால்கள் ஆட்டங்கொடுக்க ஆரம்பித்து விட்டன.


“யே... அட்றா... அட்றா... அட்றா... ந்தா ஏய்... ந்தா ...''


செண்பக ராமன் குதிபோடலானார். கூட்டமே திரும்பி இந்த ரகளையை வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டது. செத்த நேரம் ஒப்பாரியைக் கூட நிறுத்தி விட்டனர்.


சாவு வீடு கொண்டாட்டக் களமாகி விட்டது. அப்பனின் ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்த மூத்த மகன் மெதுவாக வந்து அப்பனை அணைத்துப் பிடிக்க முயன்றான். செண்பகராமன் திமிறிக் கொண்டு ஆடினார்.


“த்தா... நிறுத்துங்கடா...''


மூத்த மகன் செல்வராசாவின் அதட்டலைக் கேட்டவுடன் மேளக்காரர்கள் அடிப்பதை நிறுத்திவிட்டனர். ஆனால் செண்பகராமன் நிறுத்தவில்லை. ஆடிக் கொண்டேயிருந்தார்.


“ஏய்.. ந்த்தா , ஏய் ந்த்தா ...''


“ப்பா... வாப்பே... வந்து உக்காரு ஆத்தாள இப்டிப் போட்டுட்டு நீ ஆடிக்கிட்ருக்கியப்பே... இது ஒனக்கே நல்லா இருக்கா...''


'போடா ...ன்னி ஒனக்கெல்லாம் மசுறாடா தெரியும். “ஏய் ந்த்தா ...''


மகனைத் தள்ளிவிட்டுட்டு ஆட்டத்தைத் தொடர்ந்தார். செண்பகராமனின் வேட்டி அவிழ்ந்து விழுந்தது. தடுமாறி விழப் போன செல்லராசா சுதாரித்துக் கொண்டு, அப்பன் நெஞ்சில் ஓங்கி ஒரு மிதி மிதித்தான்.


“க்கும்'' என மூச்சு உள்வாங்கி கீழே சரிந்தார் செண்பகராமன்.


''ஆத்தா செத்துக்கெடக்கா... ஒனக்கு ஆட்டங் கேக்குதோ ஆட்டம் ... ஆத்தாளையும் அவ சொத்தையும் காலம் பூரா ஆண்டனுபவிச்சுட்டு இப்ப ஆடுறியோ ....


செல்லராசாவின் குரல் கம்மியது. லேசான அழுகையுடனேயே அப்பனை மிதிக்க ஓடிவந்தான். அதற்குள் தம்பிகள் இருவரும் பிடித்துக் கொள்ள செல்லராசாவின் மூத்த மகன் கனகு தாத்தாவை இழுத்துக் கொண்டு பூவரசமரத்தடிக்குக் கொண்டு சென்றான்.


"என்னடா ராமா நீயே இப்டி பண்ணலாமா...''


பெருசுகள் ரெண்டு மூனு பேர் ராமனைக் கடிந்து கொண்டார்கள். செல்லராசாவை தம்பிகள் கூட்டிக்கிட்டுப் போய் ஆத்தா தலைமாட்டில் உட்கார வைத்தார்கள். அவனுக்கு இன்னும் ஆத்திரம் அடங்கவில்லை .


செண்பகராமனின் மூத்த பேரன்கனகு, தாத்தாவின் ஒடம்பெல்லாம் ஒட்டியிருந்த மண்ணை துண்டால் துடைத்து விட்டான். யாரோ ஒருவர் வேட்டியைக் கொண்டு வந்து கொடுத்தார். கனகு தாத்தாவின் இடுப்பில் சுற்றி விட்டான்.


''தாத்தா... நீ குடிக்க மாட்டியே இப்ப எதுக்கு தாத்தா குடிச்ச. அப்பத்தா செத்துக் கெடக்கும் போது உன்னால எப்பிடி தாத்தா குடிச்சுட்டு கூத்தடிக்க முடியிது...''


செண்பக ராமன் தேம் பி அழ ஆரம் பித்து விட்டார். மேளக்காரர்கள் மீண்டும் அடிக்க ஆரம் பித்து விட்டார்கள். சாவு மேளத்தின் ஓசை செண்பக ராமனின் காதுகளில் இறைந்தது . வெறியுடன் எழுந்தார். கனகுவால் கட்டுப்படுத்த முடியவில்லை . அவனையும் மீறிக் கொண்டு எழுந்து குதிக்க ஆரம்பித்தார். கனகு பிடித்து நிறுத்த முயன்றான். எல்லாரும் திரும்பிப் பார்த்தனர். மெதுவாக ஆட்டத்தை நிறுத்திவிட்டு பேரனைப் பார்த்து அழுதபடியே சொன்னார்.


"அந்த ஆண்டியப்பய சுடுகாட்டு கருவமரத்துத் தூர்ல ரொம்ப நேரமாக இவளுக்காக காத்துக்கிட்ருக்கான்டா... இவளச் சீக்கிரம் அனுப்பி வைங்கடா... பொழுது விடிஞ்சா அவுங்களுக்கு கல்யாணம்’’