நீலாங்கரை, கடப்பாக்கத்தில் இ-சேவை மையம் திறப்பு


மீன்பிடி தடைக்கால நிவாரணம் கோரி, மீனவ பகுதியினர் விண்ணப்பிக்க வசதியாக, நீலாங்கரைகடப்பாக்கம் பகுதிகளில், மீன்வள இ-சேவை மையங்கள், புதிதாக துவக்கப்பட்டுள்ளன.


மீனவர்கள் வாழ்வாதாரத்திற்காக, தமிழக அரசு, பல நலத்திட்ட உதவிகளை செய்கிறது. மீன்பிடி தடைக்கால நிவாரணமாக, குடும்பத்திற்கு, 5,000 ரூபாய்; மீன்பிடி குறைவுகால நிவாரணம், 5,000 ரூபாய் என, மீன்வளத்துறை மூலம் வழங்குகிறது.இது தவிர, இன்னும் பல நலத்திட்ட சேவைகளுக்கு, மீனவர்களிடம் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பம் பெற்று, நிவாரணம் வழங்கப்படுகிறது.


தற்போது, அனைத்துத் துறைகளிலும் மின்னணு பரிமாற்றம் மேற்கொள்ளப்படுவதால், மீனவர்களும், நிவாரணம் கோரி , ' ஆன்லைன் ' வாயிலாக விண்ணப் பிக்க, அறிவுறுத்தப்பட்டு உள்ளது இ - சேவை மையத்தில், வாக்காளர், ஆதார், குடும்ப, நல வாரிய, பயோ மெட்ரிக் ஆகிய அட்டைகளை, ஸ்கேன் செய்தும், கைரேகை பதித்தும், இத்துறை இணையத்தில் பதிவேற்ற வேண்டும். அதன் பின், ஆவணப் பதிவு சரி பார்க்கப்பட்டு, மீனவர் வங்கிக் கணக்கில், நிவாரணத் தொகை, வரவு வைக்கப்படும்.


காஞ்சிபுரம் மாவட்டத்தில், எளிதாக இப்பதிவை மேற்கொள்ள, நீலாங்கரை உதவி இயக்குனர், கடப்பாக்கம் ஆய்வாளர் ஆகிய அலுவலகங்களில், இ-சேவை மையங்கள் துவக்கப்பட்டுள்ளன. மற்ற இ - சேவை மையங்களிலும், பதிவேற்றம் செய்ய முடியும்.இது குறித்து, மீனவர்கள் கூறியதாவது : மின்னணு பதிவு முறையை ஏற்றுக்கொள்கிறோம். இ-சேவை மையத்தில், ஒருவர் பதிவதற்கே, மிகவும் தாமதமாகிறது. அனைவரும், உடனே பதியவும் முடியாது. தடைக்கால நிவாரணம் வழங்க உள்ளதால், இப்போது மட்டும், ஆன்லைனில் விண்ணப்பிக்க விலக்கு அளித்து, அனைவரும் பதிந்த பிறகு, இதை செயல்படுத்தலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.