சில கவிதைகளும் சில கண்ணீ ர்த் துளிகளும்....

பித்துக்குளியின் கடிதங்கள்



கல் இருக்கையில் அமர்ந்து தனது தோள்பையைச் சுத்தம் செய்து கொண்டிருக்கிறான் பித்துக்குளி. எப்போதாவது நிகழும் அபூர்வ நிகழ்வுதான் இது.


கழுத்து நிறைய பாசி மணிகளை அணிந்திருந்த ஒரு சிறுமி அருகில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவளைச் சிரித்துச் சிரித்துப் பார்த்துக்கொண்டே ஒவ்வொரு காகிதமாக எடுத்து மடித்து வைத்துக் கொண்டிருந்தார்.


பைக்குள் இருந்து விழுந்த அழுக்குப்படிந்த பொம்மை ஒன்றைப் பார்த்துக் கொண்டே நின்றாள் அச்சிறுமி.


அதை எடுத்து அவளிடம் நீட்ட, அதை வெடுக்கென்று பறித்துக் கொண்டு ஓடினாள்.


அவள் ஓடிக்கொண்டிருப்பதையே பார்த்துக்கொண்டிருந்த பித்துக்குளி, காகிதம் ஒன்று காற்றில் பறந்து செல்ல அதைத் தாவிப்பிடித்து எடுத்தான். அது கந்தலாய் கிழிந்திருந்தது.


தாமரை...


நீ இப்படித்தான் என்று தெரியும்.


''புல்லாங்குழலாக்குகிறேன் பார்' என்று சொல்லி, சும்மா கிடந்த மூங்கிலை வெட்டி, கதறக் கதற சூடுபோட்டவள் தானே நீ.


என் நிராதரவு உன் பிம்பங்களுக்கு வண்ணம் சேர்க்கும் தூரிகையாகிப்போனது.


என் தனிமை ஈரம் பூத்த உன் தலை மயிர் உலர்த்தும் தென்றலாகிப் போனது.


என் வாழ்க்கை குறித்தான விரக்தி உன் பொழுதுகளை நிறைக்கும் கேளிக்கையாகிப்போனது.


திரும்பிப் பார்க்கிறேன்.


என் கால்களும் என் கடிகாரமுள்ளும் உன்னையே தான் சுற்றியிருக்கின்றன.


உன் கை விரல்களை கோர்த்துக் கொண்டு அரவமற்ற சாலை, யாருமற்ற பூங்கா, கூச்சலிடும் கடை வீதி, அலைவந்து பேசும் கடற்கரையென சுற்றியலைந்தே காலம் கழிந்துபோயிற்று.


உறக்கம் பிடிக்காத பின்னிரவுகளில் உன்னிடம் பேசிய நாட்களும், உன்னிடம் பேசுவதற்காகவே உறக்கம் தொலைத்த இரவுகளும் எண்ணிலடங்காதவை.


முற்றுப் பெறாத காதலுடன் என் உறக்கமற்ற இரவுகளை எப்படி எழுதி வைப்பது என்றே நான் யோசித்துக் கிடக்கிறேன்.


உன்னை நான் சந்தித்ததென்னவோ நிலவற்ற ஒரு இரவில் தான். அதற்கு பின்பான நாட்கள் அனைத்தும் எனக்கு முழு நிலவு இரவுகளாகிப் போனதுதான் விந்தை .


பூத்த தருணமறியா மலரென, உச்சி வெயிலில் பெய்த திடீர் மழையென நிகழ்ந்த அந்த சந்திப்பு நம் வாழ்க்கையில் இவ்வளவு பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டோம்.


- உன் அழைப்பு மணிக்காக நானும், என் அழைப்புக்காக நீயும் காத்திருந்த பொழுதுகளில் கடவுள் நமக்கான பாதையை கொஞ்சம் கொஞ்சமாக அடைத்துக் அடைத்துக் கொண்டே வந்திருக்கிறார்.


உனக்கு பிடிக்காதென சிலவற்றை நான் மாற்றிக் கொண்டதும், உனக்கு பிடிக்குமென சிலவற்றை மாற்றிக் கொண்டதும் நன்றாக நினைவிருக்கிறது. நான் என்பது நான் மட்டுமல்ல; அது நீயும் தான் என உணர்ந்த தருணமது.


நான் என்பதே நீ - நான் என்பதே நீயாகிப் போனபோது, 'நான்' உனக்கு தேவையில்லாமல் போய்விட்டேன்.


- இன்னும் சில காகிதத் துண்டுகளை மட்டும் உன் நினைவுகளை சுமந்து கொண்டு கிழிக்காமல் வைத்திருக்கிறேன்.


அதில் உனக்காக நான் எழுதிய சில கவிதைகள் மிச்சமிருக்கின்றன. அவைதான் நீயற்ற என் வாழ்க்கையை வசந்தப்படுத்திக் கொண்டிருக்கின்றன.


- கடைசியில் உன் காதல் எனக்கு பரிசாக தந்தது, சில கவிதைகளும் சில கண்ணீர் துளிகளும் மட்டும் தான்.


இப்படிக்கு,


நிலவன்