மீனவர்களுக்குத் தனி அமைச்சகம்
சொன்னது என்னாச்சு
மோடிஜி......?
மீனவர்களுக்கென தனி அமைச்சகம் உருவாக்கப்படும்" - இது மக்களவைத் தேர்தல் நடந்தபோது மத்தியில் ஆளும் கட்சியாக இருந்த பாரதிய ஜனதா கட்சி, அப்போது எதிர்கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எல்லா அரசியல் கட்சிகளும் அள்ளி வீசியெறிந்த தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமான ஒன்று.
இதே வாக்குறுதியை கடந்த கால மக்களவை தேர்தல்களிலும் இந்த இருபெரும் கட்சிகளும் தொடர்ச்சியாக வழங்கிக் கொண்டே தான் வருகின்றன.
தேர்தல் வாக்குறுதிகள் என்பதே கமர்ஷியல் சினிமாவில் காசு பார்ப்பதற்காக வைக்கப்படும் குத்துப்பாட்டும், குலுக்கு நடனமும் போல கவர்ச்சிதரும் விஷயம் தான் என்றாலும் ஒவ்வொரு முறையும் நம்பி நம்பி ஏமாந்து போவது நமக்குப் பழகிப்போய் விட்டது.
என்ன செய்வது? அரசியல் என்பது மக்களுக்கானதல்ல; பெரிய பெரிய பன்னாட்டு நிறுவனங்களின் முதலை வயிற்றுக்குப் போடப்படும் கொத்துக்கறி என்பது நமக்கு புரிகிறது தான். ஆனாலும் இவர்களை நம்புவதைத் தவிர நமக்கு வேறென்ன வழி இருக்கிறது?
அதிகபட்சம் கத்திப்பார்க்கலாம் ; போராடிப் பார்க்கலாம் ; அழுது கெஞ்சிப் பார்க்கலாம். கோவணத்தோடு நின்று கொடிபிடித்துப் போராடினாலும் நமக்கு கிடைக்கப்போவது எதுவும் இல்லை .
மக்களவைத்தேர்தலில் வெற்றிப்பெற்று மிகப்பெரும்பான்மை பலத்துடன் பாரதிய ஜனதா ஆட்சியை கைப்பற்றி விட்டது. பாரதிய ஜனதா சொன்ன பல தேர்தல் வாக்குறுதிகள் அதன் முன் இன்னும் நிலுவையில் உள்ளன.
மீனவப் பிரச்சனைகளுக்கு நிரந்தரதீர்வுகாணும் வகையில் மீனவர்களுக்கு தனி அமைச்சகம் உருவாக்கப்படும் என்று சொன்ன வாக்குறுதியும் அதில் ஒன்று. ஆனால் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
அமைச்சகம் உருவாக்குதல் தொடர்பான அதிகாரம் பெற்ற முதன்மை அமைச்சரான பிரதமரே அதுபற்றி வாய் திறக்காத போது ஒருசில அமைச்சர்கள் 'நிச்சயமாக மீனவர்கள் நலன் சார்ந்த அமைச்சகம் உருவாக்கப்படும்' என்கிற பழைய பஞ்சாங்கத்தை மீண்டும் புரட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்.
விரிவாக்கம் செய்யப்பட்ட மத்திய அமைச்சரவையில் மீனவர்களுக்கென தனி அமைச்சகம் அறிவிக்கப்படும் என காத்திருந்த மீனவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தேர்தலுக்கு முன்பே தமிழக மீனவப் பிரதிநிதிகள் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். அதில் இன்றியமையாதது மீனவர் நலனுக்கென தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும் என்பது.
மீனவர்கள் நலன் சார்ந்து முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுள் சில...
• விவசாயிகளுக்கு மானியத்துடன் கடன் வழங்குவது போல மீனவர்களுக்கும் கடன் தர வேண்டும்.
• கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறுசீரமைப்பு செய்ய வேண்டும்.
• இரு நாட்டு மீனவர்களும், பாரம்பரிய முறைப்படி மீன் பிடிக்கும் உரிமை பெற்றுத்தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியிருந்தனர்.
ராமநாதபுரத்தில் நடை பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திரமோடி, விஞ்ஞான தொழிற்நுட்பங்களின் மூலம் மீனவர்கள் பாதுகாக்கப் படுவார்கள் என்று பேசினார்.
குஜராத்தில் சேட்டிலைட் மூலம் மீன்கள் அதிகம் இருக்கும் இடத்தை கண்டறிந்து அந்த விபரங்களை மீனவர்களின் செல்போன்களுக்கு தெரிவிக்கப்படுவதாக தன் சொந்த மாநிலப் பெருமையையும் கொஞ்சம் அள்ளிவிட்டார்.
இந்த தொழிற்நுட்பத்தின் உதவியோடு மீனவர்கள் அந்த குறிப்பிட்ட இடத்திற்கு சென்று மீன்களை அதிக அளவில் பிடித்துக் கொண்டு 2 மணி நேரத்தில் திரும்பி விடுவதாகவும் கதை விட்டார்.
பா.ஜ.க. இந்த முறையும் ஆட்சிக்கு வந்தால் இத்திட்டம் இந்தியா முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு மீனவர்களையும் பாதுகாப்போம் என்றார்.
வண்ணமீன்கள் வளர்ப்பு தொழில் நுட்பத்தையும் மீனவர்களுக்கு கற்றுக் கொடுத்து அவற்றை ஏற்றுமதி செய்ய வழிவகை ஏற்படுத்தி மீனவர்கள் பொருளாதாரமுன்னேற்றம் அடையவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஆனால் தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கும் மத்திய அமைச்சரவையில் மீனவர்களுக்கென தனி அமைச்சகம் அறிவிக்கப்படவில்லை .
மத்திய அரசில் மீனவர்கள் நலன் மற்றும் பாதுகாப்பு என்ற அடிப்படையில் புதிதாக ஒரு அமைச்சகம் அமையும் பட்சத்தில் அது மீனவர்கள் சார்ந்து இந்தியா சந்திக்கும் கடற்சார் பிரச்சனைகள் பலவற்றை எளிதில் தீர்த்துக்கொள்ள வழிவகை செய்யும்.
தமிழக - இலங்கை மீனவர் பிரச்சனை மற்றும் குஜராத் - பாகிஸ்தான் மீனவர் பிரச்சனை போன்றவற்றை பேச்சுவார்த்தை மூலம் அணுகுவதற்கு ஒரு தனி அமைச்சரவை கட்டாயமாகிறது.
கடற்கரைப் பகுதிகள் அமைந்துள்ள பல்வேறு மாநிலங்களிலும் கடலோரபாரம்பரிய மீனவர்களுக்கு தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் இருந்து கொண்டே இருக்கின்றன. அதற்கு அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய எந்தவித அமைப்பும் இல்லையென்பதே காரணம்.
மீனவர்கள் நலன் சார்ந்த தனி அமைச்சகம் அமையும் பட்சத்தில் அவர்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும்.
'பா.ஜ.க. ஆட்சி அமைந்தால் கடலோர மீனவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் சிறப்பு கவனம் செலுத்தப்படும்' என பிரச்சாரக் கூட்டங்களில் எல்லாம் முழங்கிய பிரதமர் நரேந்திர மோடி தற்போது தனிப் பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி அமைந்தும் இது தொடர்பான எந்தவித அக்கறையும் காட்டாதது மீனவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அமைச்சரவையில் எந்த கட்சி ஆட்சி நடைபெற்றபோதும் ஒரு மீனவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டதே இல்லை.
தேவகவுடா பிரதமராக இருந்தபோது பீகாரைச் சேர்ந்த ஒரு மீனவர் மத்திய இணை அமைச்சராக இருந்திருக்கிறார். அந்த ஒரு அபூர்வ வாய்ப்பு மட்டுமே கிடைத்திருக்கிறது.
மத்தியில் மீனவர்களுக்கென்று தனி துறை அமைந்தால் மீனவர்கள் அரசியல் ரீதியாக எழுச்சிப் பெறவும் தங்கள் பிரதிநிதித்துவத்தின் மூலம் அரசியல் பங்களிப்புச் செய்யவும் வாய்ப்புகள் அமையும்.
தமிழ்நாட்டிற்கு சொந்தமான கச்சத்தீவு இலங்கை வசம் ஒப்படைக்கப்பட்டது. இது இந்திய கூட்டாட்சித் தத்துவத்தின் மீது நிகழ்த்தப்பட்ட கொடுமையான தாக்குதலாகும். இது மத்திய அரசு ஒரு மாநில அரசின் மீது எந்த அளவிற்கு ஆதிக்கம் செலுத்தமுடியும் என்பதற்கு சாட்சியாக அமைந்துள்ளது.
இதுவரை இலங்கை கடற்படையால் 600க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 1000க்கும் மேலானவர்கள் காயப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். மதிப்பிட முடியாத அளவிற்கு பொருட் சேதம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனாலும் பெரும் வல்லரசு கனவுடன் ஐக்கிய நாடுகள் சபையில் வலம் வந்து கொண்டிருக்கும் இந்தியாவால் சின்னஞ்சிறு தீவான இலங்கையை குறைந்தபட்சம் கண்டிக்கக்கூட முடியவில்லை .
இதை மத்திய அரசின் இயலாமையென்றும் சொல்லலாம். அல்லது விருப்பமின்மையென்றும் சொல்லலாம்.
தமிழக அரசில் மீனவர்களுக்கென்று தனி அமைச்சரவை இருக்கிறது தான். ஆனால் அது மீனவர்களின் நலன், மீனவர்களுக்கான நலத்திட்டங்கள், பொருளாதார உதவிகள், தொழிற்சார்ந்த உதவிகள், உள்கட்டமைப்பு மற்றும் குடியிருப்பு சார்ந்த உதவிகள் போன்றவற்றையே அமைத்துக் கொடுக்க இயலும்.
பாதுகாப்பு என்பது மத்திய அரசின்கட்டுப்பாட்டில் உள்ளது. அதனால் மீனவர்களுக்கான பாதுகாப்பை மத்திய அரசால் அமைக்கப்படும் மீனவர் நலன் மற்றும் பாதுகாப்புத்துறை தான் உறுதிசெய்யமுடியும்.
கடந்த பல ஆண்டுகளாக தேர்தல்கள் பல கடந்து விட்டன. கோரிக்கைகள் கோரிக்கைகளாகவே இன்னும் இருக்கின்றன. வாக்குறுதிகள் வெறும் வாக்குறுதிகளாகவே நீடிக்கின்றன. மீனவர்களுக்கு விடிவுகாலம் எப்போது?