தலையங்கம்
'மீனவன்' என்பது சாதியல்ல.....
ஒரு சர்வதேசப் பழங்குடி இனம்!
உந்தியா வேற்றுமையில் ஒற்றுமை காணும் ஒருமைப்பாடு நிறைந்த நாடு'' என்று பாடப்புத்தகத்தில் படித்திருக்கிறோம். ஆம், எண்ணற்ற இனங்கள், ஆயிரக்கணக்கான மொழிகள், ஊருக்கு நூறு சாதிகள், இருந்தது - வந்தது- பிரிந்தது என்று பல மதங்கள் இப்படிப் பல்வேறுபட்ட பிரிவுகளைக் கொண்ட மக்கள் வாழ்ந்தாலும் 'இந்தியன்' என்கிற ஒற்றைச் சொல் நம்மை இணைத்திருக்கிறது.
அது மட்டுமல்ல, நாம் இன்னொன்றையும் இப்பிரிவினைகளுடன் சேர்த்துக் கொள்ளலாம். அது பல்லாயிரக் கணக்கில் இந்தியாவெங்கும் புதிது புதிதாக முளைத்துப் பரவிக் கிடக்கும் அரசியல் கட்சிகள் - அமைப்புகள் - சாதி சங்கங்கள்.
நாட்டு விடுதலைக்காகப் போராடியவர்கள் ஒன்றிணைந்தார்கள். அவர்களின் ஒன்றிணைவு ஒரு அமைப்பாக ஆனது. பின் அது அரசியல் கட்சியானது. அக்கட்சியின் செயல்பாடுகளுக்கு ஆதரவு தெரிவித்த குழுக்கள் சிறுசிறு அமைப்புகளாயின. அவையும் அரசியல் கட்சிகளாயின. அக்கட்சிகளின் கொள்கைகளுக்கு எதிராக நின்றவர்கள் சில அமைப்புகளாயின. பின் அவையும் அரசியல் கட்சிகளாயின.
இப்படி இன்று பல்லாயிரம் கட்சிகள்.
சாதிக்கொரு சங்கங்கள், மத்திற்கொரு கூட்டமைப்புகள் பெருகிக் கொண்டே போகின்றன. தேசிய உணர்வு மேலோங்கி எழுந்ததால் அமைப்புகளாகத் திரண்டவர்களிடம், மொழிப்பற்று, இனப்பற்று என்று சுருங்கி இன்று சாதிப் பற்று வெளியே பல்லைக் காட்டி இளித்துக் கொண்டிருக்கிறது.
சரி, விஷயத்திற்கு வருவோம்.
தற்போது, மீனவர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்கிற கோரிக்கை பரவலாக எழுப்பப்பட்டு வருகிறது. அது தொடர்பாக நேர்மறையானமற்றும் எதிர்மறையான கருத்துக்கள் உலவிக் கொண்டிருப்பினும் சரியான நேரத்தில் தான் இது பேசு பொருளாக மாறியிருக்கிறது.
சாதிக்கொரு சங்கமும் அரசியல் கட்சியும் இருக்கும் போது, மீனவர்களுக்கென்று ஒரு அமைப்பு உருவாவதில் தவறென்ன இருக்கிறது?
ஏனென்றால், மீனவர் என்பது ஒரு சாதியல்ல; உலகமெங்கும் பரவிக்கிடக்கும் ஒரு சர்வதேசக் கடற் பழங்குடி இனம். அவர்களுக்கான உரிமைக்குரலை ஒங்கி ஒலிக்கச் செய்யவும் சர்வதேச அளவில் அவர்களுக்கான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தவும் அவர்கள் அமைப்பாக ஒன்றிணைய வேண்டும். அது நிச்சயம் அமைந்தே தீரும்.
- பொறுப்பாசிரியர்