போராடாதே...! மீனவர்களின் வாக்குகளை நீக்கிய ஜனநாயக அவலம்


கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில், குளச்சல் மற்றும் கிள்ளியூர் தொகுதியில் மீனவர் கிராமங்கள் அதிகமாக உள்ளன. வாக்குப்பதிவு நாளன்று சில பகுதிகளில் வாக்களிப்பதற்கான பூத் சிலிப் வழங்கப்படவில்லை எனப் புகார் எழுந்தது.


குளச்சல் மற்றும் கிள்ளியூர் சட்ட சபைத் தொகுதிக்குட்பட்ட முட்டம் மீனவர் கிராமத்தில், சுமார் 300 வாக்காளர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறவில்லையாம்.


மேலும், இனயம் மற்றும் கிள்ளி யூர் தொகுதிக்குட்பட்ட தூத்தூர் கிராமத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை .


தூத்தூர் பயாஸ் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளதாகப் புகார் எழுந்தது . இதையடுத்து, தூத்தூர் மக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், தரையில் அமர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.


மேலும், தூத்தூர் வாக்குச்சாவடிக்கு வந்த கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரேவிடமும் மக்கள் கேள்வி எழுப்பினர். ஆனால், கலெக்டர் எந்தப் பதிலும் அளிக்காமல் சென்றுவிட்டார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "இனயத்தில் வர்த்தகத் துறைமுகத்திற்கு எதிராகப் போராடிய பகுதியைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்டுள்ளது.


மேலும், ஒகி புயலின்போது காணாமல்போன மீனவர்களைக் கண்டுபிடிக்கக்கோரி போராட்டம் நடத்திய தூத்தூர் பகுதியிலும் அதிகமானோரின் வாக்குகள் காணாமல் போயுள்ளன.


2016 சட்டசபைத் தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு இப்போது வாக்குரிமை மறுக்கப்படுவது அ நியாயம். முன்கூட்டியே பூத் சிலிப் கொடுத்திருந்தால், விடுபட்ட பெயர்கள் குறித்து தெரியவந்து விடும் என்பதால், பூத் சிலிப் கூட வழங்கப்படவில்லை .



* இத்தனை ஆண்டு காலம் தேர்தலில் வாக்களித்துள்ளோம். திடீரென இப்போது வாக்கு இல்லை என்று அதிகாரிகள் கூறுவதை ஏற்க முடியாது. நாங்கள் வாக்களிக்க கூடாது என்று திட்டமிட்டு பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன'' என்று அக்கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.


இந்த விவகாரம் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி பிரசாந்த் மு.வடநேரே அறிக்கை அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்ட வட்டாட்சியர் நிலையிலான அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கிராமத்தில் ஆய்வில் ஈடுபட்டனர்.


இதனை அடுத்து, இது தொடர்பான அறிக்கை தலைமை தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்கப் பட்டுள்ளது.


இந்த அறிக்கை தொடர்பாக தேர்தல் துறை வட்டாரங்கள் கூறுகையில் 2018 செப்டம்பர் மாதத்துக்கு பின்னர் குமரி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல்படி 14.47 லட்சம் வாக்காளர்கள் இருந்தனர்.


திருத்தப் பணிக்கு பிறகு இந்த ஆண்டு ஜனவரி 31ல் வெளியான இறுதி வாக்காளர் பட்டியலில் 30 ஆயிரம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு 14.47 லட்சம் வாக்காளர்கள் இருந்தனர்.


பட்டியல் திருத்த பணியின் போது 7671 மற்றும் துணைப்பட்டியல் வெளியானபோது 2371 என மொத்தம் 10,042 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன.


மரணம், இரட்டை பதிவு ஆகிய பெயர்கள் மட்டுமே. 40 ஆயிரம் பெயர்கள் நீக்கம் என்று கூறுவது தவறான தகவல் என்று அது தெரிவிக்கப்பட்டு ளதாக தேர்தல் அலுவலர்கள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.



வாக்காளர் நீக்கத்தை ஒப்புக்கொண்ட அதிகாரிகள்:


கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் கடந்த 2016ம் ஆண்டு தேர்தலில் இருந்த வாக்காளர்களைவிட 526 பேர் குறைந்துள்ளனர், நாகர்கோவிலில் 9835 பேர், குளச்சலில் 8, 472, பத்மநாபபுரம் தொகுதியில் 10035 பேரும், விளவங்கோடு தொகுதியில் 3512 பேர் குறைந்துள்ளனர்.


கிள்ளியூர் தொகுதியில் அதிகபட்சமாக 13032 பேர் குறைவு ஆகும். ஆனால் இது பற்றி மாவட்ட அதிகாரிகள் தலைமை தேர்தல் அதிகாரிக்கு தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை .


மேலும் இது அவரது கவனத்திற்கும் கொண்டு செல்லப்படவில்லை . கடந்த 8 மாதத்தில் மட்டும் 10ஆயிரம் பேர் நீக்கப்பட்டுள்ளதை ஒப்புக்கொண்ட அதிகாரிகள் கடந்த மூன்றாண்டுகளில் அதாவது கடந்த சட்டமன்ற தேர்தலில் இருந்த வாக்காளர்களில் மொத்தம் 45 ஆயிரத்து 412 பேர் நீக்கம் செய்யப்பட்டது பற்றி எந்த விளக்கமும் அளிக்கவில்லை .


இது வாக்காளர் பட்டியலில் அதிகாரிகள் செய்த குளறுபடிகளை மூடிமறைக்கும் செயல் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


வாக்காளர் பட்டியலில் பெயர்கள் நீக்கம் என்பது கடந்த 8 மாதத்திற்கு முன்பும் பெருமளவில் நடை பெற்றது என்பது தேர்தல் ஆணைய புள்ளி விபரங்களின் இருந்தே தெரியவருகிறது.