மீனவர்களுக்னெத் தனி தேசிய இயக்கம்
ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த நாம், விடுதலை பெற்றுவிட்டோம். இனி சுதந்திரமாக வாழலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம். இன்று சமூக அடிப்படையிலும், பொருளாதார அடிப்படையிலும் அரசியல் வாதிகளிடமும் பெரும்பணக்கார முதலைகளிடமும் ஒடுக்கப்பட்டுக் கிடக்கிறோம். இதிலிருந்து நாம் விடுதலை அடைந்தாக வேண்டும்.
இங்கு விடுதலை என்பது அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவது தான்.
உரிமைகள் பற்றியான விவாதங்கள் நிகழ்த்தப்படும் போதெல்லாம் அங்கு நாம் மௌனமாக நிற்கிறோம். நமக்கான குரல் ஒலிப்பதே இல்லை. இந்த நிலை மாற வேண்டும். அதிகார மையங்களிலெல்லாம் நமக்கான குரல் ஒலித்தாக வேண்டும். அதற்கான முதல் படியாக நமக்கான பிரதிநிதிகளை நாமே நமக்குள்ளேயே தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் எழுந்திருக்கிறது.
எத்தனை நாளைக்குத்தான் கட்சிப் பதவிகளுக்காகவும், கட்டப் பஞ்சாயத்துச் சில்லறைக்காவும் கண்டவனுக்கும் காவடி தூக்கிக் கொண்டிருப்பது?
இனி நமக்கான அரசியல் கோட்பாடுகளை நாமே எழுதிக் கொள்வோம். கடலுக்கு நாம் தான் ராஜாக்கள் - நாம் தான் மந்திரிகள். மண்ணில் நாம் பொருட்படுத்தப்படாத வெற்றுப் பிரஜைகளாகிப் போனதற்குக் காரணம் என்ன? ஒற்றுமையின்மை.
காலம் காலமாகச் சாதியைச் சொல்லியும், மதத்தைச் சொல்லியும், நம்மை ஒன்றுபட விடாமல் சில கயவர்கள் கவனமாகவே பார்த்துக் கொள்கின்றனர். அவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ள வேண்டும்.
கடலுக்குப் போன நம் உறவு உயிரோடு கரைக்குத் திரும்ப வேண்டும். புயல் வரும் முன் அரசு நமக்காக ஓடி வர வேண்டும். பக்கத்து நாட்டு ராணுவம் நம்மைக் கைது செய்த உடன் பாதுகாப்பு அமைச்சர் பதற வேண்டும். அதற்கு நமது வலிமையான குரல் கோட்டைக்குள் ஒலிக்க வேண்டும்.
நமக்கான அரசியல் விடுதலையை நாமே போராடிப் பெற்றுக் கொள்வோம். அதற்குத் தேவை ஒற்றுமை. இனி நாம் வாழும் பகுதிகளில் நாமே மக்கள் பிரதிநிதிகள். கவுன்சிலரில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் வரை நாமே இருக்க வேண்டும். அதற்குத் தேவை ஒற்றுமை.
சாதிப் பெயரைச் சொல்லிக்கொண்டு, பிற சமூகத்தினரிடையே பகை உணர்வுகளைத் தூண்டிவிட்டு, சாதி அடையாளத்துக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் தலைவலி 'களேகட்சி என்று ஒரு கருமத்தை ஆரம்பித்து தங்களது கூட்டத்திற்கு தலைவனாகும் போது...
'மீனவன்' என்பது ஒரு சர்வதேசக் கடற் பழங்குடியினம். நமக்கென ஒரு இயக்கம் ஏன் இருக்கக் கூடாது. நமக்கெனப் பேச - நமக்கெனப் போராட - நம்மையெல்லாம் ஒற்றைப் புள்ளியில் இணைக்க - ஒரு தேசிய இயக்கம் அவசியம்.
இன்றைக்கு இது பேசு பொருளாக இல்லாமல் இருக்கலாம், நமக்கான காலம் கனியும். அப்போதுதான் நமக்கான பொழுது விடியும்.
- பொறுப்பாசிரியர்