தலையங்கம்
என்னங்க சார் உங்க திட்டம்...?
“கச்சத்தீவை மீட்போம்'
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் தமிழகக் கட்சிகள் அனைத்தும் கடலோர மாவட்டங்களில் பரப்புரை செய்யும்பொழுதெல்லாம் கத்திக் கொண்டே இருக்கின்றன.
1974ம் ஆண்டு இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது. ஆனால் அதன் பிறகான அத்தனை தேர்தல்களிலும் கச்சத்தீவு மீட்பு பிரச்சனை ஒவ்வொரு கட்சியின் தேர்தல் வாக்குறுதியிலும் இடம் பெறத் தொடங்கிவிட்டது.
இந்த நாடாளுமன்றத் தேர்தல் வாக்குறுதிகளிலும் 'கச்சத்தீவு மீட்பு' பெரிய எழுத்துக்களில் பல்லைக் காட்டிக் கொண்டுதான் இருக்கிறது.
என்ன கொடுமையென்றால் “கச்சத்தீவை மீட்பு பற்றிய பேச்சுக்கே இடமில்லை” என்று வலிமையாக மறுத்துக்கொண்டிருக்கும் தேசியக் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டே 'கச்சத்தீவை மீட்போம்' என்று கூசாமல் சொல்லிக் கொண்டிருக்கும் திராவிடக் கட்சிகளை என்னவென்று சொல்வது?
இந்திய மீனவர்கள் பாக் ஜலசந்தி பகுதியிலும், கச்சத்தீவு பகுதியிலும் மீன்பிடிக்கவோ, கச்சத்தீவில் ஓய்வெடுக்கவோ, வலைகளை உலர்த்தவோ இலங்கை அரசாங்கம் அனுமதியளிப்பதில்லை.
'எல்லை மீறினார்கள்' என்று சொல்லி இலங்கைக் கடற்படையால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுகிறார்கள். கைது செய்யப்படுகிறார்கள். சுட்டுக்கொல்லப்படுகிறார்கள். ஆனாலும் கச்சத்தீவை மீட்பது பற்றி இந்திய அரசுக்கோ, தமிழக அரசுக்கோ அக்கறையில்லை.
ஆனால் தேர்தல் நேரங்களில் மட்டும் வாய்வலிக்கப் பேசிக்கொண்டே திரிகிறார்கள்.
கச்சத்தீவை மீட்பது பற்றி இரு திராவிடக் கட்சிகளின் பெரும் தலைகளும் தத்தம் பங்குக்கு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிப் பல ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால் அவர்கள் இப்போது இல்லை. அவர்கள் நிறைவேற்றிய தீர்மானம் மட்டும் செல்லாக் கோப்பாக தலைமைச் செயலகத்தில் உறங்கிக் கொண்டிருக்கிறது.
கச்சதீவை மீட்பது என்பது மத்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டதுதான். மத்தியில் ஆட்சியமைக்கக் காத்திருக்கும் எந்த தேசியக் கட்சியும் கச்சத்தீவு மீட்பு உறுதிமொழியை அளிக்கவில்லை . அப்படி இருக்கும்போது இவர்கள் எப்படி மீட்பார்கள்?
தங்கள் கூட்டணி வெற்றிபெற்றால் மத்தியில் அமையும் அரசுக்கு அழுத்தம் கொடுத்து கச்சத்தீவை மீட்க வலியுறுத்துவார்களாம்.
நல்லா உறுத்துவீங்க...!
- பொறுப்பாசிரியர்